மயூரன் என்ற அந்த பதினேழு வயது குழந்தை இன்னமும் என் நினைவை விட்டு அகல மறுக்கிறான். சொற்ப முறையே அவனை நான் சந்தித்து இருந்தாலும், அவனுடைய ஆழ்ந்த அறிவு எனக்கு மிகவும் பிடித்து போயிற்று. என்னுடைய மாமன் மகன் வினோத்தின் வகுப்புத் தோழன் அவன். இந்த ஆண்டின் தொடக்கித்தில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதினார்கள். ஒவ்வொரு தேர்வு நாளிலும் காலையிலேயே எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். என் தாய் அவர்கள் இருவரையும் அருகாமையில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு வருவார்கள். வினோத் என்னை 'மச்சான்' என்று முறைவைத்து அழைத்ததால் மயூரனும் என்னை மச்சான் என்றே அழைப்பான். "C.A. படிக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஆராய்ச்சி செய்து ஒரு கண்டுபிடிப்பை கொடுக்க வேண்டும் மச்சான்" என்று அவன் தெளிவாகச் சொன்னது இன்னமும் கூட எனது செவியில் அவன் குரலிலேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது. தேர்வு முடிவுகள் வெளியான போது தொள்ளாயிரத்து தொண்ணூறு எடுத்திருந்தான். ஆயிரத்திற்கு பத்து மதிப்பெண்கள் மதிப்பெண்கள் குறைவு. இது ஒன்றும் மோசமான எண்ணிக்கையாக இல்லாமல் இருந்தாலும், அவன் மிகவும் உடைந்து போனான்.
அவன் அதிகமாக எதிர்பார்த்திருப்பான் போல. "நீ எதிர்பார்க்கும் எந்த முன்னணி கல்லூரியிலும் இடம் கிடைக்காது. ஏதாவது ஒரு டப்பா கல்லூரியில் மாலை நேர வகுப்புகளில் இடம் கிடைக்கலாம்" என்று நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். ரொம்பவும் நொருங்கிப் போனான். இதை அறிந்த நான் வினோத்திடம் மயூரனை அழைத்து வரும்படி கூறினேன். எந்த கல்லூரியில் படித்தாலும் சாதிக்கத் துணிந்தவனுக்கு தடையொன்றும் இல்லை என்பதை அவனுக்கு புரியவைக்க வேண்டும் என திட்டமிட்டேன். அன்று இரவு எனக்கு தொலைபேசியில் வந்த செய்தி "மயூரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்."
அந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுக்க தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை இருபத்து மூன்று.
கடந்த ஐந்து மாதத்து செய்தித்தாள்களை புரட்டிப் பாருங்கள். மாணவர்களின் தற்கொலை புள்ளி விபரங்கள் தங்கள் இதயத்தை தீயிலிட்டு பொசுக்கி விடும்.
சேலத்தைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் (கல்லூரியில் நான்காம் ஆண்டு அல்ல -- பள்ளியில் வெறும் நான்காம் வகுப்பு) காலாண்டு கணக்குத் தேர்வில் தோல்வியுற்று தீக்குளித்தான். சென்னையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் வீட்டுப் பாடம் செய்யவில்லை. அதனால் பள்ளிக்கு போக மாட்டேன் என சொல்லியிருக்கிறான். அவனுடைய பெற்றோர், "நீ கட்டாயம் பள்ளிக்கு சென்றாக வேண்டும். போய் ஆசிரியரிடம் அடிவாங்கு அப்பத்தான் உனக்கு புத்தி வரும்" என சொல்லிவிட்டார்கள். சிறுவனும் பள்ளிக்கு செல்வது போல் பாசங்கு செய்து விட்டு, அவன் தாய் கடைக்கு சென்றிருந்த நேரம் பார்த்து, வீடு திரும்பி, அறையில் தூக்கிட்டுக் கொண்டான். பெற்றோர் அழுது புரண்டார்கள். பயன்?
நான்காம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவி பாடங்கள் கடுமையாக இருக்கிறது என்ற காரணத்தினால் தூக்கிட்டு கொண்டாள். மிக அண்மையில் -- இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வில் காப்பி அடித்து பிடிபட்டான். பெற்றோரை அழைத்து வந்தால் தான் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவாய் எனக் கூறிவிட்டார்கள் ஆசிரியர்கள். நேராக விடுதிக்கு வந்தவன் தூக்கில் தொங்கினான். இனி எத்தனை தவமிருந்தாலும் இவர்களை உயிர்பித்து விட முடியுமா?
சத்தியமாகச் சொல்கிறேன். கல்லூரி படிப்பு முடிக்கும் வயது வரை தூக்கிட்டுக்கொள்வது எப்படி என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒன்பது வயதுச் சிறுவனுக்கு தீக்குளிக்கத் தெரிகிறது. தூக்கிட்டுகொள்ளத் தெரிகிறது. எங்ஙணம்??
சர்வ நிச்சயமாய் இவற்றுக்கு காரணம் ஊடகங்களே. கொஞ்சமும் சமூக உணர்வற்ற ஊடகங்கள் தான். முன்பெல்லாம் செய்தித்தாள்களில் சாவுச் செய்திகளின் புகைப்படங்கள் அரிதாக இருக்கும், அப்படியே இருந்தாலும் அவ்வளவு தெளிவாக இருக்காது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தற்போது 'டைட் க்ளோசப்'பில் படங்கள் எடுக்கப்பட்டு பெரிது பெரிதாகப் போடப்படுகின்றன. தண்டவாளத்தில் தலைகொடுத்து தலை வேறு, உடல் வேறான பிணத்தின் புகைப்படம் பிரசுரிக்கப்படுகிறது. தற்கொலைக்கு செய்தித்தாள்களிலும் தொலைகாட்சிகளிலும் அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றன. இறந்தவர்களைச் சுற்றி அவர் பெற்றோரும் உறவினரும் வருந்திக் கதறவது நெடுநேரம் காண்பிக்கப்படுகிறது. இதை பார்க்கும் குழந்தைகளும் அப்படியான ஒரு கரிசனத்திற்கு ஏங்கி இது போன்ற ஒரு முடிவிற்கு வருகிறார்கள். இது போன்ற தற்கொலைச் செய்திகளை ஊடகங்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும்.
திரைப்படங்களிலும், சீரியல்களிலும் தற்கொலைக் காட்சிகள் தத்ரூபமாக காண்பிக்கப்படுகின்றன. கயிறை எப்படி முடிச்சிடுகிறார்கள், எப்படி கழுத்தில் இட்டுக் கொள்கிறார்கள், எங்ஙனம் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொள்கிறார்கள் என்பது அணு அணுவாக காண்பிக்கப்படுகிறது.
சரி இப்போது இந்தக் குழந்தைகளின் அடிப்படை பிரச்சனையை பார்ப்போம்
இன்றைய மாணவர் உலகத்தினை உற்று நோக்குங்கள். கண்ணீர் குளத்தினுள் மூழ்கி உங்கள் கண்கள் மரித்து போகக்கூடும். எட்டாம் வகுப்பு வரை தேர்வு முறைகூடாது என்பது சட்ட அளவிலேயே உள்ளது. எந்த பள்ளியும் இதைக் கிஞ்சிற்றும் மதிப்பது கிடையாது. K.G. வகுப்புகளுக்கு கூட காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டுத் தேர்வுகள் உள்ளன. நடுநடுவில் Mid-Term எனப்படும் குறுந்தேர்வுகள். காலை எழுந்தவுடன் படிக்கிறார்கள். பின்னர் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் குட்டு பட்டு, அடிவாங்கி படிக்கிறார்கள். மாலை வீடு திரும்பியவுடன், தனி வகுப்பு எனப்படும் Private Tuitions -- எட்டு மணிவரையில். பெரிய வகுப்புகளுக்கு ஒன்பது மணி வரையிலும் கூட. ஒரு கூலித் தொழிலாளி அயர்ச்சியுடன் படுக்கையில் விழுவது போல் விழுகிறார்கள். மீண்டும் காலை எழுந்து அதே அக்கப்போர். விடுமுறை நாட்களுக்கு கனத்த அளவில் வீட்டுப் பாடம் கொடுத்து சைக்கோத்தனமாக நடந்து கொள்கின்றன பள்ளிகள். முழு ஆண்டு விடுமுறை முழுக்க அந்தப் பயிற்சி, இந்தப் பயிற்சி, என அவர்களை எண்ணையிலிட்டு பொரிக்கிறார்கள் பெற்றோர். போட்டி நிறைந்த உலகினை எதிர்கொள்ள குழந்தைகளை தயார்படுத்துவதாக தங்களை சமாதானஞ் செய்து கொள்கிறார்கள்.
ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் நிலை மிகவும் மோசமானது. இவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் என எட்டு மணிவரை பள்ளியிலேயே வைத்துக் கொள்கிறார்கள். முழு ஆண்டு விடுமுறை இவர்களுக்கு இல்லவே இல்லை.
குழந்தைகளின் மெல்லிய சிறகுகளை கோடரி கொண்டு வெட்டி எறிகிறது இன்றைய கல்வி முறை.
இந்தக் குழந்தைகளின் முகங்களைப் பாருங்கள். மரண தண்டனை நிறைவேற்றப்பட அழைத்துச் செல்லப்படும் கைதியின் முகத்தைவிட இவர்களிடம் சவக்கலை மிகுந்து காணப்படுகிறது.
மதிப்பெண் குறைந்து போனால் எதிர்காலமே போய்விட்டது என்ற முடிவிற்கு இவர்கள் வர காரணங்கள் என்ன? விரும்பிய கல்லூரியிலே அல்லது பாடத்திலோ இடம் கிடைக்காவிட்டால் நாம் இவ்வுலகில் வாழ்வதற்கு தகுதியிழந்து விட்டோம் என்ற முடிவிற்கு ஏன் வருகிறார்கள்? இவர்களை மிகுந்த மனச்சுமைக்கு ஆளாக்கி, அஞ்சி நடுங்கி வெம்பிப்போகும் அளவிற்கு அமைந்து விட்ட கல்வி முறையினை எப்படி சீர் செய்வது? மாலை முழுதும் விளையாட்டு என்ற பாரதியின் கவிதை வரிகள் இனி எப்போதும் சாத்தியமே இல்லையா? நாம் கல்லூரியில் படித்த இளங்கலை பாடங்கள் இப்போது ஒன்பது பத்தாம் வகுப்புகளிலேயே புகுத்தும் அளவிற்கு அத்தனை அவசியம் நேர்ந்து விட்டதா?
* பள்ளிகள் / கல்லூரிகள் பின்பற்றும் முறைமைகளில் எவ்வெவற்றை நீக்கலாம் அல்லது சேர்க்கலாம்?
* கல்வி முறைகளில் எவ்வகையான சீர்முறைகளை மேற்கொள்ளலாம்?
இவற்றை இங்கு அறியத் தந்தீர்கள் என்றால், அவற்றை தொகுத்து விரைவில் சம்பந்தப்பட்ட கதவுகளை தட்டலாம் என்பது எண்ணம்.
இப்பதிவு உலகம் அறிவுநிறை பெரியோர்களால் நிறைந்து காணப்படுகிறது. கூடிச் சிந்திப்போம். எப்படியாவது தீர்வினை கண்டுபிடிப்போம். நிச்சயம் முடியும். குழந்தைகளை, குழந்தைகளாகவே -- சிறகடித்துப் பறக்கும் வானம்பாடிகளாகவே -- இருக்க நாம் அனுமதிக்க முடியும். உறுதியாக!!
பெற்றோர்களின் மனப்போக்கையும் இங்கு நோக்க வேண்டியுள்ளது. கல்விமுறை ஏற்கனவே குழந்தைகளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அவையத்து முந்தியிருக்கச் செய்வது நல்லது. ஆனால் ரொம்பவும் முந்தியிருக்கச் செய்கிறேன் என்ற பெயரில், பெற்றோர்கள் குழந்தைகளை நெம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு??
L.K.G. படிக்கும் என் தம்பி மகனுடன் மாடியில் உலவிக்கொண்டிருந்த போது, "பெலியப்பா (பெரியப்பா -- அவனுக்கு 'ரா' வராது, பச்சைக்குழந்தை அவன்) இந்த காக்கா ஸ்கூலுக்கு போலியா?" என கேட்டான்.
"இல்லப்பா அதுக்கெல்லாம் ஸ்கூல் கிடையாது" என்றேன்.
"இந்த புலா (புறா)?"
"ம்ஹூம்"
"அதோ அந்த காத்தாடி"
"ம்ஹூம்"
"அந்த மரம்?"
"ம்ஹூம்"
"இந்த ரோஜா?"
"ம்ஹூம்"
"லொம்ப ஜாலி தானே அதுங்களுக்கு"
மிகச் சாதாரணமாக என்னுள் அமிலத்தை கொட்டிவிட்டான் அவன்.
ஏசு கிறுத்து சிலுவையில் அறையப்பட்ட போது அவர் கண்கள் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்யமுடிகிறதா? முடியவில்லை எனில், இன்றைய மாணவனின் கண்களைப் பாருங்கள், தத்ரூபம்.
தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களைப் பற்றி படிக்கும் போது எனக்கு தோன்றுவது இது தான். நான் அவன் தலையை கறுப்பு துணியினால் போர்த்தி, தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றினில் வலிந்து நுழைக்கிறேன். பின் அவன் நின்றிருக்கும் மேடையை இடறி விடுகிறேன். அவன் துடிப்பு அடங்கும் வரையிலும் வேடிக்கை பார்க்கிறேன். உங்களுக்கு?????
Monday, December 18, 2006
Subscribe to:
Posts (Atom)