Monday, December 18, 2006

சிலுவையில் அறையப்படும் மாணவர்கள்

மயூரன் என்ற அந்த பதினேழு வயது குழந்தை இன்னமும் என் நினைவை விட்டு அகல மறுக்கிறான். சொற்ப முறையே அவனை நான் சந்தித்து இருந்தாலும், அவனுடைய ஆழ்ந்த அறிவு எனக்கு மிகவும் பிடித்து போயிற்று. என்னுடைய மாமன் மகன் வினோத்தின் வகுப்புத் தோழன் அவன். இந்த ஆண்டின் தொடக்கித்தில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதினார்கள். ஒவ்வொரு தேர்வு நாளிலும் காலையிலேயே எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். என் தாய் அவர்கள் இருவரையும் அருகாமையில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு வருவார்கள். வினோத் என்னை 'மச்சான்' என்று முறைவைத்து அழைத்ததால் மயூரனும் என்னை மச்சான் என்றே அழைப்பான். "C.A. படிக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஆராய்ச்சி செய்து ஒரு கண்டுபிடிப்பை கொடுக்க வேண்டும் மச்சான்" என்று அவன் தெளிவாகச் சொன்னது இன்னமும் கூட எனது செவியில் அவன் குரலிலேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது. தேர்வு முடிவுகள் வெளியான போது தொள்ளாயிரத்து தொண்ணூறு எடுத்திருந்தான். ஆயிரத்திற்கு பத்து மதிப்பெண்கள் மதிப்பெண்கள் குறைவு. இது ஒன்றும் மோசமான எண்ணிக்கையாக இல்லாமல் இருந்தாலும், அவன் மிகவும் உடைந்து போனான்.


அவன் அதிகமாக எதிர்பார்த்திருப்பான் போல. "நீ எதிர்பார்க்கும் எந்த முன்னணி கல்லூரியிலும் இடம் கிடைக்காது. ஏதாவது ஒரு டப்பா கல்லூரியில் மாலை நேர வகுப்புகளில் இடம் கிடைக்கலாம்" என்று நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். ரொம்பவும் நொருங்கிப் போனான். இதை அறிந்த நான் வினோத்திடம் மயூரனை அழைத்து வரும்படி கூறினேன். எந்த கல்லூரியில் படித்தாலும் சாதிக்கத் துணிந்தவனுக்கு தடையொன்றும் இல்லை என்பதை அவனுக்கு புரியவைக்க வேண்டும் என திட்டமிட்டேன். அன்று இரவு எனக்கு தொலைபேசியில் வந்த செய்தி "மயூரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்."


அந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுக்க தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை இருபத்து மூன்று.


கடந்த ஐந்து மாதத்து செய்தித்தாள்களை புரட்டிப் பாருங்கள். மாணவர்களின் தற்கொலை புள்ளி விபரங்கள் தங்கள் இதயத்தை தீயிலிட்டு பொசுக்கி விடும்.


சேலத்தைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் (கல்லூரியில் நான்காம் ஆண்டு அல்ல -- பள்ளியில் வெறும் நான்காம் வகுப்பு) காலாண்டு கணக்குத் தேர்வில் தோல்வியுற்று தீக்குளித்தான். சென்னையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் வீட்டுப் பாடம் செய்யவில்லை. அதனால் பள்ளிக்கு போக மாட்டேன் என சொல்லியிருக்கிறான். அவனுடைய பெற்றோர், "நீ கட்டாயம் பள்ளிக்கு சென்றாக வேண்டும். போய் ஆசிரியரிடம் அடிவாங்கு அப்பத்தான் உனக்கு புத்தி வரும்" என சொல்லிவிட்டார்கள். சிறுவனும் பள்ளிக்கு செல்வது போல் பாசங்கு செய்து விட்டு, அவன் தாய் கடைக்கு சென்றிருந்த நேரம் பார்த்து, வீடு திரும்பி, அறையில் தூக்கிட்டுக் கொண்டான். பெற்றோர் அழுது புரண்டார்கள். பயன்?


நான்காம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவி பாடங்கள் கடுமையாக இருக்கிறது என்ற காரணத்தினால் தூக்கிட்டு கொண்டாள். மிக அண்மையில் -- இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வில் காப்பி அடித்து பிடிபட்டான். பெற்றோரை அழைத்து வந்தால் தான் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவாய் எனக் கூறிவிட்டார்கள் ஆசிரியர்கள். நேராக விடுதிக்கு வந்தவன் தூக்கில் தொங்கினான். இனி எத்தனை தவமிருந்தாலும் இவர்களை உயிர்பித்து விட முடியுமா?


சத்தியமாகச் சொல்கிறேன். கல்லூரி படிப்பு முடிக்கும் வயது வரை தூக்கிட்டுக்கொள்வது எப்படி என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒன்பது வயதுச் சிறுவனுக்கு தீக்குளிக்கத் தெரிகிறது. தூக்கிட்டுகொள்ளத் தெரிகிறது. எங்ஙணம்??


சர்வ நிச்சயமாய் இவற்றுக்கு காரணம் ஊடகங்களே. கொஞ்சமும் சமூக உணர்வற்ற ஊடகங்கள் தான். முன்பெல்லாம் செய்தித்தாள்களில் சாவுச் செய்திகளின் புகைப்படங்கள் அரிதாக இருக்கும், அப்படியே இருந்தாலும் அவ்வளவு தெளிவாக இருக்காது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தற்போது 'டைட் க்ளோசப்'பில் படங்கள் எடுக்கப்பட்டு பெரிது பெரிதாகப் போடப்படுகின்றன. தண்டவாளத்தில் தலைகொடுத்து தலை வேறு, உடல் வேறான பிணத்தின் புகைப்படம் பிரசுரிக்கப்படுகிறது. தற்கொலைக்கு செய்தித்தாள்களிலும் தொலைகாட்சிகளிலும் அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றன. இறந்தவர்களைச் சுற்றி அவர் பெற்றோரும் உறவினரும் வருந்திக் கதறவது நெடுநேரம் காண்பிக்கப்படுகிறது. இதை பார்க்கும் குழந்தைகளும் அப்படியான ஒரு கரிசனத்திற்கு ஏங்கி இது போன்ற ஒரு முடிவிற்கு வருகிறார்கள். இது போன்ற தற்கொலைச் செய்திகளை ஊடகங்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும்.


திரைப்படங்களிலும், சீரியல்களிலும் தற்கொலைக் காட்சிகள் தத்ரூபமாக காண்பிக்கப்படுகின்றன. கயிறை எப்படி முடிச்சிடுகிறார்கள், எப்படி கழுத்தில் இட்டுக் கொள்கிறார்கள், எங்ஙனம் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொள்கிறார்கள் என்பது அணு அணுவாக காண்பிக்கப்படுகிறது.


சரி இப்போது இந்தக் குழந்தைகளின் அடிப்படை பிரச்சனையை பார்ப்போம்


இன்றைய மாணவர் உலகத்தினை உற்று நோக்குங்கள். கண்ணீர் குளத்தினுள் மூழ்கி உங்கள் கண்கள் மரித்து போகக்கூடும். எட்டாம் வகுப்பு வரை தேர்வு முறைகூடாது என்பது சட்ட அளவிலேயே உள்ளது. எந்த பள்ளியும் இதைக் கிஞ்சிற்றும் மதிப்பது கிடையாது. K.G. வகுப்புகளுக்கு கூட காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டுத் தேர்வுகள் உள்ளன. நடுநடுவில் Mid-Term எனப்படும் குறுந்தேர்வுகள். காலை எழுந்தவுடன் படிக்கிறார்கள். பின்னர் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் குட்டு பட்டு, அடிவாங்கி படிக்கிறார்கள். மாலை வீடு திரும்பியவுடன், தனி வகுப்பு எனப்படும் Private Tuitions -- எட்டு மணிவரையில். பெரிய வகுப்புகளுக்கு ஒன்பது மணி வரையிலும் கூட. ஒரு கூலித் தொழிலாளி அயர்ச்சியுடன் படுக்கையில் விழுவது போல் விழுகிறார்கள். மீண்டும் காலை எழுந்து அதே அக்கப்போர். விடுமுறை நாட்களுக்கு கனத்த அளவில் வீட்டுப் பாடம் கொடுத்து சைக்கோத்தனமாக நடந்து கொள்கின்றன பள்ளிகள். முழு ஆண்டு விடுமுறை முழுக்க அந்தப் பயிற்சி, இந்தப் பயிற்சி, என அவர்களை எண்ணையிலிட்டு பொரிக்கிறார்கள் பெற்றோர். போட்டி நிறைந்த உலகினை எதிர்கொள்ள குழந்தைகளை தயார்படுத்துவதாக தங்களை சமாதானஞ் செய்து கொள்கிறார்கள்.


ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் நிலை மிகவும் மோசமானது. இவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் என எட்டு மணிவரை பள்ளியிலேயே வைத்துக் கொள்கிறார்கள். முழு ஆண்டு விடுமுறை இவர்களுக்கு இல்லவே இல்லை.


குழந்தைகளின் மெல்லிய சிறகுகளை கோடரி கொண்டு வெட்டி எறிகிறது இன்றைய கல்வி முறை.

இந்தக் குழந்தைகளின் முகங்களைப் பாருங்கள். மரண தண்டனை நிறைவேற்றப்பட அழைத்துச் செல்லப்படும் கைதியின் முகத்தைவிட இவர்களிடம் சவக்கலை மிகுந்து காணப்படுகிறது.


மதிப்பெண் குறைந்து போனால் எதிர்காலமே போய்விட்டது என்ற முடிவிற்கு இவர்கள் வர காரணங்கள் என்ன? விரும்பிய கல்லூரியிலே அல்லது பாடத்திலோ இடம் கிடைக்காவிட்டால் நாம் இவ்வுலகில் வாழ்வதற்கு தகுதியிழந்து விட்டோம் என்ற முடிவிற்கு ஏன் வருகிறார்கள்? இவர்களை மிகுந்த மனச்சுமைக்கு ஆளாக்கி, அஞ்சி நடுங்கி வெம்பிப்போகும் அளவிற்கு அமைந்து விட்ட கல்வி முறையினை எப்படி சீர் செய்வது? மாலை முழுதும் விளையாட்டு என்ற பாரதியின் கவிதை வரிகள் இனி எப்போதும் சாத்தியமே இல்லையா? நாம் கல்லூரியில் படித்த இளங்கலை பாடங்கள் இப்போது ஒன்பது பத்தாம் வகுப்புகளிலேயே புகுத்தும் அளவிற்கு அத்தனை அவசியம் நேர்ந்து விட்டதா?


* பள்ளிகள் / கல்லூரிகள் பின்பற்றும் முறைமைகளில் எவ்வெவற்றை நீக்கலாம் அல்லது சேர்க்கலாம்?

* கல்வி முறைகளில் எவ்வகையான சீர்முறைகளை மேற்கொள்ளலாம்?

இவற்றை இங்கு அறியத் தந்தீர்கள் என்றால், அவற்றை தொகுத்து விரைவில் சம்பந்தப்பட்ட கதவுகளை தட்டலாம் என்பது எண்ணம்.

இப்பதிவு உலகம் அறிவுநிறை பெரியோர்களால் நிறைந்து காணப்படுகிறது. கூடிச் சிந்திப்போம். எப்படியாவது தீர்வினை கண்டுபிடிப்போம். நிச்சயம் முடியும். குழந்தைகளை, குழந்தைகளாகவே -- சிறகடித்துப் பறக்கும் வானம்பாடிகளாகவே -- இருக்க நாம் அனுமதிக்க முடியும். உறுதியாக!!

பெற்றோர்களின் மனப்போக்கையும் இங்கு நோக்க வேண்டியுள்ளது. கல்விமுறை ஏற்கனவே குழந்தைகளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அவையத்து முந்தியிருக்கச் செய்வது நல்லது. ஆனால் ரொம்பவும் முந்தியிருக்கச் செய்கிறேன் என்ற பெயரில், பெற்றோர்கள் குழந்தைகளை நெம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு??

L.K.G. படிக்கும் என் தம்பி மகனுடன் மாடியில் உலவிக்கொண்டிருந்த போது, "பெலியப்பா (பெரியப்பா -- அவனுக்கு 'ரா' வராது, பச்சைக்குழந்தை அவன்) இந்த காக்கா ஸ்கூலுக்கு போலியா?" என கேட்டான்.

"இல்லப்பா அதுக்கெல்லாம் ஸ்கூல் கிடையாது" என்றேன்.

"இந்த புலா (புறா)?"

"ம்ஹூம்"

"அதோ அந்த காத்தாடி"

"ம்ஹூம்"

"அந்த மரம்?"

"ம்ஹூம்"

"இந்த ரோஜா?"

"ம்ஹூம்"

"லொம்ப ஜாலி தானே அதுங்களுக்கு"

மிகச் சாதாரணமாக என்னுள் அமிலத்தை கொட்டிவிட்டான் அவன்.

ஏசு கிறுத்து சிலுவையில் அறையப்பட்ட போது அவர் கண்கள் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்யமுடிகிறதா? முடியவில்லை எனில், இன்றைய மாணவனின் கண்களைப் பாருங்கள், தத்ரூபம்.

தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களைப் பற்றி படிக்கும் போது எனக்கு தோன்றுவது இது தான். நான் அவன் தலையை கறுப்பு துணியினால் போர்த்தி, தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றினில் வலிந்து நுழைக்கிறேன். பின் அவன் நின்றிருக்கும் மேடையை இடறி விடுகிறேன். அவன் துடிப்பு அடங்கும் வரையிலும் வேடிக்கை பார்க்கிறேன். உங்களுக்கு?????

Wednesday, November 15, 2006

பாடை கட்டுங்கள் கோக் பெப்சிக்கு

என் தந்தையார் சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை மேற்கொண்டிருந்த காலம். Dialysis செய்ய ஆரம்பித்த புதிது. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே உட்கொள்ள அனுமதித்திருந்தனர். மாத்திரைபோடுவது, பழச்சாறு / காபி உட்பட இவை அனைத்தும் இதில் அடக்கம். பின்னர் 500 மி.லி என்று குறைத்து கிட்டத்தட்ட 100 Dialysis முடியும் போது வெறும் 150 மி.லி மட்டுமே அனுமதித்திருந்தனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 25 மாத்திரைகள் இதில் போடவேண்டும். மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது இப்படிச் சொன்னார், "சரவணா, அனுமதித்திருக்கும் அளவிற்கு மேல் தண்ணீர் குடித்தால், உயிர் போய்விடும் என்றால், பரவாயில்லை, ஒரு சொம்பு தண்ணீர் கொடுங்கள். ஆசை தீர குடிக்கிறேன். உயிர் போனாலும் பரவாயில்லை. மனிதனை அதை சாப்பிடாதே, இதை சாப்பிடாதே என்று கட்டுப்படுத்தலாம். ஆனால் தண்ணீர் கூட அவனுக்கு கிடைக்காமல் இருப்பது மிகப் பெரிய தண்டனை." தண்ணீர் தாகத்துடனேயே அவர் மரணம் அடையும்படி ஆயிற்று.

ஒரு சொட்டு தண்ணீருக்காக ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக் கொள்ளும் காலத்தினை நோக்கி இந்நாட்டு மக்களை பிடறியில் அடித்து பன்னாட்டு கம்பெனிகள் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படி தள்ளப்படுவதை மத்திய மாநில அரசுகளும், ஓட்டு பொறுக்கி அரசியல் தலைவர்களும் ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பன்னாட்டு கம்பெனிகளில் முதலிடத்தில் இருப்பன கோக் மற்றும் பெப்சி.

கோக் மற்றும் பெப்சி இவற்றை முற்றாக புறக்கணியுங்கள் என்பது ஏதோ அந்நிய நாட்டு பொருட்களை அனைத்தையும் புறக்கணிப்பது என்ற சுதேசி-விதேசி கோட்பாட்டு வறட்டுத் தவளை கோஷம் என்ற ரீதியிலேயே மக்களால் உணரப்பட்டு வருவதாக கருத இடம் உண்டு. மாறாக இந்நிறுவனங்களின் தார்மீக கொள்கை, பலநாடுகளில் இவர்கள் பின்பற்றும் பணியாளர் விரோத தொழிற்கொள்கை, இயற்கை வளங்களை பகாசுர வெறியோடு சுரண்டியும் சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் கேட்டினை விளைவிக்கும் தயாரிப்பு முறைகளையும், இவர்கள் தொடுக்கும் கலாச்சார சீர்கேட்டு தாக்குதல்களையும் முன்நிறுத்தி பார்க்க வேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கு.

கோக் மொத்தம் 195 நாடுகளில் தனது ஆக்டபஸ் கரங்களை விரிவுபடுத்தி மொத்தம் 20 பில்லியன் டாலர்களை அள்ளிக்கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டு அறிக்கையில் கோக் பின் வருமாறு முழங்கி இருந்தது.
"கோகோ கோலா குடும்பத்தினராகிய நாம் ஒவ்வோரு நாள் கண்விழிக்கும் போதும், உலகின் 5.6 பில்லியன் மக்கள் அனைவரும் அன்றைய நாள் தாகம் கொள்வார்கள். இந்த மக்கள் அனைவரையும் தாகம் தீர்த்துக் கொள்ள கோக் தவிர வேறு வழியில்லை என்று செய்து விட்டால், பின் பல நீண்ட காலங்களுக்கு நம் எதிர்காலம் நிச்சயமானதான ஒன்றாகி விடும். வேறு எந்த மாற்றும் இல்லை."

அதாவது மக்கள் அனைவருக்கும் தண்ணீர் என்பதையே இல்லாததாக்கி விடும் ஒரு கொடூரமான லட்சியம்.

சர்வதேச அளவில் கோக் தனது தயாரிப்பான Bon Aqua என்ற போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்ய ஆரம்பித்த போது பெப்சி Aquafina என்ற பெயரில் தண்ணீரை விற்க ஆரம்பித்தது. இந்தியாவில் கோக் Kinley என்ற பெயரில் தண்ணீர் வியாபாரம் செய்கிறது. எந்த அமைச்சரவை கூட்டமாகட்டும், அரசியல் கூட்டமாகட்டும், மேசைகளில் தவறாமல் Aquafina அல்லது Kinley இடம் பெற்றுவிடும். தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது உதிர்க்கும் கேவல வெடிச் சிரிப்பின் பின்னணியில் மின்னும் Aquafina வெகு பொருத்தம்.

இந்தியாவில் 104.4 மில்லியன் டாலர்கள் என இருந்த தண்ணீர் வியாபார சந்தை ஆண்டுக்கு 50 முதல் 70 சதவீத பிரமாண்ட வளர்ச்சி பெற்று வருகிறது. 1992 முதல் 2000 வரை இடைபட்ட காலத்தில் 95 மில்லியன் லிட்டராக இருந்த விற்பனை 932 மில்லியன் லிட்டரை எட்டி தற்போது 4 பில்லியன் லிட்டராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கோக்கின் அநியாய நிலத்தடி நீர்ச் சுரண்டல் பிளாச்சிமட மக்களால் தான் பெரிய அளவில் அம்பலப்படுத்தப்பட்டது. இங்கு கோக் தனது 6 ஆழ் துளைகிணறு மூலம் நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியது. இதன் காரணமாக அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென அதள பாதாளத்திற்கு சென்றது. பத்தடி என்று இருந்த நீர்மட்டம் நூறு அடிக்கு மேல் சரிந்து, முன்னூறு அடிக்குப் போனது. இந்த பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட்ட 260 ஆழ்துளாய்க்கிணறுகளும் வற்றிப் போயின. இவை மட்டுமல்ல இந்நிறுவனக் கழிவுகள் வெளியே கொட்டப்பட்டு மழைக்காலத்தில் அவை பக்கத்து வயல்களில் கலந்ததால் அந்நிலங்கள் மலடாகியதுடன், பல்வேறு நோய்களும் பரவ ஆரம்பித்தன. அப்பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தினை வலுப்படுத்தினார்கள். பெருமாப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் என்பவருக்கு 30 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து போராட்டத்தை அமுக்கப் பார்த்து படுதோல்வி கண்டது கோக். பெருமாப்பட்டி பஞ்சாயத்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது.

கோக்கின் இணைய தளம் பொய்யான தகவலைக் கொண்டிருக்கிறது. 6 ஆழ்துளைக் கிணற்றில் மூன்று மட்டுமே இயங்கும் என்றும், அவற்றிலிருந்து 0.5 மில்லியன் லிட்டர் மட்டுமே எடுக்கப்படுவதாக சொல்கிறது. ஆனால் கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் 1.5 மில்லியன் லிட்டர் என்கிறது. India Resource Center தனது அறிக்கையில் 3.5 மில்லியன் லிட்டர் என்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் நீதிமன்றத்தில் கோக் இந்த எண்ணிக்கை எதையும் எதிர்க்கவேயில்லை என்பது. எனில், இதற்கு என்ன பொருள்?

2003ம் ஆண்டு இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பில் "மக்களுக்கு என்று இருக்கும் தண்ணீர், போன்ற இயற்கை வளங்களுக்கு அரசாங்கம் என்பது பாதுகாவலனாக இருக்க வேண்டுமே தவிர, அவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் (கேடுகெட்ட) வேலையை செய்யக் கூடாது" என குட்டு வைத்தது. மாத்ருபூமியில் வீரேந்திர குமார் பின்வருமாறு எழுதினார். "மக்கள் தலைநிறைய நீர்க்குடங்களை தூர இடங்களில் இருந்து கொண்டு வரும் அதே நேரத்தில் கோக் நிறுவனத்திலிருந்து லாரி நிறைய குளிர்பானங்கள் வெளியே செல்கிறது."

தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்று நீரை மேய்ந்து கொள்ளுமாறு ஏற்கனவே கோகோ கோலா நிறுவனத்தை 32 பற்களும் தெரிய இளித்து வரவேற்றுக் கொண்டது தமிழக அரசு. கங்கைகொண்டான் பகுதியில் தொழிற்சாலை அமைத்துக் கொள்ள கோக்கின் பினாமியான South Indian Bottling Company Ltd. ( SIBCL ) என்ற நிறுவனத்தை அனுமதித்தது அரசு. ஏற்கனவே கோக்கின் யோக்கியதை புழுத்து நாறிப்போனதால் எதிர்ப்புகளை சமாளிக்க SIBCLன் பெயர் முகமூடி அணிந்து கொள்ளப்பட்டது. நாளொன்றுக்கு 900,000 லிட்டர் தண்ணீரை தாமிரபரணியில் இருந்து உறிஞ்சிக் கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் கோக் மக்களிடம் தாங்கள் 500,000 லிட்டர் மட்டுமே எடுக்கப்போவதாக சொல்வது தகிடுதித்தம். நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் என்பது ஏறக்குறைய 20,000 மக்களின் தினசரி தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்யவல்லது. இந்த 10 லட்சம் லிட்டர் தண்ணீரில் கோக் உபயோகம் போக மீதி 7 லட்சம் லிட்டர் கழிவு நீராக மறுபடியும் சுற்றுச்சூழலில் கலக்கப்படும் பயங்கரத்தையும் நாம் உணர வேண்டும். பிளாச்சிமடத்தில் கோக் வெளியேற்றிய கழிவுகளில் கேட்மியம் (cadmium) என்ற கேன்சரை உருவாக்கும் வேதிப்பொருள் 'பாதுகாப்பு' அளவை விட சுமார் 400 முதல் 600 மடங்கு அதிகமாக இருந்தது.

தாமிரபரணியில் தண்ணீர் வளம் ஏற்கனவே பற்றாக்குறையில் தான் உள்ளது. தாமிரபரணியின் கரையோரத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீருக்காக நெடுந்தூரம் நடைபயணம் செல்வதை இன்றும் காணமுடியும். அப்படி இருக்கையில் கோக்கின் அநியாயச் சுரண்டலை எங்ஙணம் அனுமதிக்க முடியும்? இந்த பிரச்சினையில் ம.க.இ.க., பு.வி.மு ஆகிய அமைப்புகள் காட்டிய தீவிர எதிர்ப்பில் நூற்றில் ஒரு பங்கு கூட ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் காண்பிக்கவிலை என்பது முகத்தில் அறையும் நிஜம்.

ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் ஏற்கனவே கோக், பெப்சி இவைகளின் தண்ணீர்ச் சுரண்டல் நடைபெற்று வருகின்றன. உத்திர பிரதேச மாநிலம் 'மேதிகஞ்ச்' எனும் இடத்தில் கோக் தொழிற்சாலையினால் 3 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்கள் அனைத்தும் நீர் இன்றி வரண்டன. ராஜஸ்தான் மாநிலம் 'காலதீரா' எனும் பகுதியிலும் கோக்கினால் தண்ணீர் உறிஞ்சப்பட்டது. இந்த இரண்டு பகுதியையும் சேர்ந்தவர்கள் இணைந்து 'நீர் அதிகார யாத்திரை' மேற்கொண்டு போராடி வருகின்றனர். இவை தவிர திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள நேமம், ஆந்திராவின் கம்மம் ஆகிய பகுதிகளும் கோக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கோக் மற்றும் பெப்சி நிறுவனம் மூலம் அநேக பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. கங்கைகொண்டானில் 200 பேருக்கு வேலை கொடுத்திருப்பதாக கோக் கூறியது. SIBCLன் மூலதனம் 28 கோடி ரூபாய். எனில், ஒரு பணியிடத்திற்கு ரூ.14 லட்சம். ஆனால் பெரும்பான்மையான மூலதனம் இயந்திரங்களில் செய்யப்பட்டது. அதாவது மனிதர்களால் செய்ய முடிந்த பல வேலைகளுக்கு இயந்திரம். இதைவிட பெரிய தொழிற்சாலையான பிளாச்சிமடத்தில் வெறும் நூறு பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள். அப்பகுதி மக்கள் தினக்கூலிகளாக தற்காலிக அடிப்படையில் வேலை செய்தனர். அவர்களில் ஒரு நாள் சம்பளம் ரூ.40

கோக் பெப்சி போன்ற குளிர்பானங்கள் அதைக் குடிக்கும் மக்களை அதற்கு அடிமைப்படுத்தும் இரசாயணங்கள் கொண்டதாக உள்ளன. இதைக் குடிக்கும் சிறார்கள், அளவிற்கு அதிகமாக உப்பி பருத்து, நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களாக ஆகின்றனர். சில அறிவுஜீவிகள் உணவு முடிந்து கோக்/பெப்சி பானம் பருகும் பழக்கம் உடையவர்களாக மாறிவிட்டனர். கேட்டால் ஜீரணத்திற்கு என்பர். இப்பானம் குடித்தவுடன் 'ஏவ்' என பெரு ஏப்பம் வருவது வெறும் உட்சென்ற காற்றினால் அன்றி ஜீரணத்தினால் அல்ல. பழச்சாறு, மோர் அல்லது மிளகுரசம் இவை ஜீரணத்திற்கு உதவும்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் கடைகோடியில் இருக்கும் எனது கிராமத்தில் கூட (மின்சாரம் வந்து வெறும் எட்டாண்டுகள் ஆகிறது), "இந்தாங்கப்பு கலரு" என கோக் விருந்துபசாரம் நடக்கிறது. கோக்கும் பெப்சியும் ஒரு அந்தஸ்தின் அடையாளமாக இங்கு கொள்ளப்படுகிறது. பாரம்பரிய பானங்களான இளநீர், பால், மோர், எலுமிச்சைச் சாறு, கேழ்வரகு கஞ்சி ஆகியன வழக்கொழிந்து போய் வருகிறது. இவற்றில் அடங்கியிருக்கும் விட்டமின்களும் தாது உப்புகளும் சிறிதும் இல்லை குளிர்பானங்களில்.

நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது நீர் என்பது மிகப்பெரிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. 1991ல் வளைகுடாப் போர் நடந்தபோது, அணைகள் மீது அமெரிக்கா குண்டு வீசி, குடிக்கக் கூட நீர் கிடைக்காமல் செய்தது. இராக் போரிலும் அமெரிக்கா பாக்தாதின் நீர் அளிப்பை முதலில் தாக்கியது. 1999ல் நேட்டோ குண்டு வீசி, யூகோஸ்லாவியாவின் நீரை முழுவதுமாக மாசுபடுத்தியது. இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு குடிநீர் கிடைக்காத வண்ணம், குடிநீர்க் குழாய்களைக் குறிவைத்து தாக்கியது. இப்படி பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தற்போது இந்தியாவில் தண்ணீர் வளத்தினை முற்றிலுமாக உறிஞ்சி துடைத்துவிடும் முயற்சியில் கோக்/பெப்சி குளிர்பான நிறுவனங்களும் பன்னாட்டுத் தண்ணீர் வியாபாரிகளும் பகிரங்காமாக போர் தொடுத்திருக்கிறார்கள். முற்றிலும் தண்ணீர் வற்றிப்போய்விட்டால்?? இருக்கவே இருக்கிறது வேறொரு நாடு அவர்களுக்கு. முதுகெலும்பில்லாத மனிதர் நிறைந்த நாடுகளுக்கு உலகில் பஞ்சமா என்ன !!

ஒவ்வொரு போத்தல் குளிர்பானத்திலும் பூச்சி கொள்ளி மட்டுமல்ல விவசாயிகளின் கண்ணீர், குடிக்கவும் தண்ணீர் இழந்த எம்மக்களின் இரத்தம் ஆகியனவும் சரிவிகிதத்தில் கலந்துள்ளன. இத்தனைக்கும் பின்னரும் "சாரி பாஸ், கோக் குடிக்காமல் என்னால் இருக்க முடியாது" என்று சொல்பவர்கள், எட்ட நில்லுங்கள். வருங்கால சந்ததியினர் உங்கள் முகத்தில் உமிழும் எச்சில் படாத தூரத்தில்.




மேலதிக புரிதலைப்பெற தோழர் அசுரனின் பதிவுகள் இங்கே:
அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்
அக்காமாலா, கப்ஸியும் - இம்சை அரசன் துன்பமணியும்
மற்றும்
தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?
'கோக்': அடிமைத்தனத்தின் சுவை
கடல் நீர் தனியார்மயம், காற்றும் ஆகலாம் எதிர்காலத்தில்
நீரில் வணிகம், 'நீர் இல்' துயரம்

Monday, November 06, 2006

நல்ல ஓர் கவிதை

சிவசேகரம் அவர்களின் பின்வரும் கவிதையினை நான் படிக்குமாறு நேர்ந்தது. ரொம்பவும் சிந்திக்க கவிதை தனை தமிழ்மணத்தில் வைக்க பிரியப்படுகிறேன்.

சட்டமும் சமுதாயமும்
சி. சிவசேகரம்

சட்டம்
நிபுணர்களதும் நீதவான்களதும் வழக்கறிஞர்களதும்
காவற் துறையினரதும் கைகளில் பத்திரமாகவே உள்ளதால்
கையும் மெய்யுமாக அகப்பட்ட கள்வனால்
சட்ட நுணுக்கங்களின் இடைவெளிகளில் நுழைந்து
தப்பி ஓட இயலுமாகிறது
பட்டப் பகலில் நடுத் தெருவிற் கொலை செய்தவன்
சட்ட நூலேணியிலேறி நழுவ முடிகிறது
குடிவெறியில் காரோட்டிய யம தூதனை
அளவோடு குடி என்று
செல்லமாய்க் கண்டிக்க நீதவானுக்கு முடிகிறது.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில்
இருக்க வேண்டியவர்களின் வசம் இருக்கிறது.
அதை வைத்திருக்கிறவர்கள்
இருக்கிறவர்களின் கையில் இருக்கிறார்கள்.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தும்
உரிய வேலையைச் செய்ய வில்லை என்றெண்ணி
ஒரு பெண்ணை பஸ் மோதிக் கொன்றதற்காகச்
சட்டந் தெரியாதவர்கள்
பஸ்களை நொறுக்கி நீதி வழங்கினார்கள்.
அப்போது
சட்டத்தைக் கவனமாக வைத்திருக்கிறவர்கள்
“மக்கள் சட்டத்தைத் தம் கையிலெடுப்பது
தவறு” என்று கண்டித்தார்கள்.

மக்கள் உண்மையிலேயே சட்டத்தைத் தம் கையில்
எடுத்துக் கொள்வார்களேயானால்,
எவ்வளவு நன்றாக இருக்கும்.

Monday, October 30, 2006

புளு கிராஸ் அமைப்பு மனிதர் மீதும் பாசம் வைக்கட்டும்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் அமைந்திருப்பது கட்டப்பெட்டு கிராமம். இங்கு நாகராஜ் என்ற ஏழு வயது சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன் தினம் பள்ளிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த நாகராஜ் மீது இருபதுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் தாக்குதல் தொடுத்து இருக்கின்றன. பயத்தால் இரு கை-கால்களையும் மடக்கி குன்றித் தரையில் மடிந்து கொண்ட இச்சிறுவனை தலை முதல் கால் வரை கடித்து குதறியிருக்கின்றன. துடித்து கதறியிருக்கிறான் சிறுவன். அவனது கதறலைக் கேட்ட பொதுமக்கள் ஒன்று கூடி கல்லால் அடித்தும், பெருஞ்சப்தம் எழுப்பியும் நாய்களை விரட்டியடித்திருக்கின்றனர்.



தனியார் மருத்துமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள இச்சிறுவனுக்கு இதுவரை உடலில் 400 தையல்கள் போடப்பட்டுள்ளன. அதிகளவில் சிறிய காயங்களும் உள்ளன என்றும் அவற்றுக்கு இன்னும் 200 தையல்கள் வரை போட வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காயங்களில் வைரஸ் கிருமிகள் அதிகளவில் உள்ளதால் அவற்றை அழித்துவிட்டு பிறகு தையல் போடும் வேலையில் மருத்துவர்கள் ஈடுபட்டு உள்ளனர். குன்னூரில் மழைக்காலத்து கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் சிறுவனுக்கு ஜன்னி ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கு கண்கானிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

இந்தப் பகுதிகளில் தெரு நாய்களின் தொந்தரவு சமீப காலங்களில் அதிகமாக உள்ளது என மக்கள் தெரிவிக்கிறார்கள். நாளொன்றுக்கு 2 முதல் 3 போர் வரை நாய்கடிக்கு ஆளாகின்றனர். அதாவது மாதமொன்றுக்கு சராசரியாக 60 முதல் 90 போர் வரை. கடந்த வாரமும் கூட ஒரு மருத்துவர் மீது இந்நாய்கள் பாய்ந்ததில் கை கால்கள் என பல இடங்களில் கடி வாங்கியிருக்கிறார்.

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றுக்கு நகராட்சியினால் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அந்த நாய்களே மீண்டும் குட்டி போட்டு பல்கிப் பெருகி உள்ளன. எனில், இதில் ஏதோ முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது.




இந்த தெருநாய்களை எப்படியாவது ஒழித்து தங்களை காத்தளிக்கும்படி மன்றாடி வருகின்றனர் இப்பகுதி மக்கள். மயக்க ஊசி போட்டு நாய்களை கொல்ல முயற்சி எடுத்த நகராட்சியை கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தது புளு கிராஸ் அமைப்பு.

புளு கிராஸ் அமைப்பின் செயல்பாடுகளில் எள்முனை அளவிற்கும் அதிருப்தியிலை நமக்கு , அதன் மகத்தான சேவையினை உண்மையிலேயே பலமுறை வியந்து பாராட்டி இருக்கிறேன். ஒரு முறை விபத்தொன்றில் சிக்கிய தெரு நாய்குட்டியினை பார்த்து பதறிப்போய் புளு கிராஸ் அமைப்பிற்கு தொலைபேசித் தகவல் தெரிவித்ததில், சடுதியில் ஆம்புலன்ஸ் வண்டியில் வந்து நாயை எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து பின்னர் ஒரு மாதங்கழித்து அதே இடத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். இதனை கண்ட இப்பகுதி மக்கள் அது முதல் எங்கள் பகுதியில் நாய், பூனை இவைகள் எங்கு துன்பத்தில் சிக்கினாலும், உடனே என்னிடம் வந்து தகவல் தெரிவிப்பார்கள். நானும் புளு கிராஸ் அமைப்பினை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிப்பேன். இது போன்ற நேரங்களில் புளு கிராஸ் அமைப்பின் மேலான சேவை பாராட்டுக்குரியது.

ஆனால் தற்போது நீலகிரி மாவட்ட விஷயத்தில் தீர்வு என்னவாய் இருக்க முடியும்? அவற்றுக்கு மீண்டும் 'தரமுள்ள' கருத்தடை செய்யலாம் தான். இப்போது இருக்கும் நாய்களை என செய்வது? கட்டுக்கடங்காமல் சென்று விட்ட நாய்க்கூட்டத்தினமிருந்து பொது மக்களையும், குழந்தைகளையும் எங்ஙணம் காப்பது? ஊசி போட்டு அவைகளை கொன்றழிப்பதில் புளு கிராஸ் அமைப்பிற்கு உடன்பாடில்லாமல் போனால், அந்நாய்க்கூட்டத்தினை கவர்ந்து சென்று ஓரிடத்தில் வைத்து அவர்களே பராமரித்துக் கொள்ளட்டும். அல்லது உரிய தீர்வினை அவர்களையே முன்வைக்கச் சொல்லலாம்.

இப்பதிவினை கண்ணுறும் சகோதர சகோதரிகள் பலரும் பல நாடுகளில் உள்ளீர்கள். உங்கள் பகுதி அனுபவத்திலுள்ள அல்லது உங்களுக்கு தோன்றும் தீர்வினை முன்வையுங்கள். இந்த பிரச்சனை நீலகிரியில் மட்டுமல்ல நம் நாட்டில் அநேக இடங்களில் உள்ளன.

இப்போதைக்கு நீலகிரி பகுதிக்கு எனக்கு தோன்றும் தீர்வு -- நாய்களை ஊசி போட்டு கொல்வது மட்டும் தான். வேறு வழியில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பல பேர் பாதிக்கப்படுவர். தாமதம் கூடாது. கொல்லுங்கள் நாய்களை -- காப்பாற்றுங்கள் மக்களை.

புளு கிராஸ் அமைப்பினரே! நாய்கள் மீது வைத்திருக்கும் அன்பில் சிறிதளவு மனிதர் மீதும் வையுங்கள். 400 தையல் வாங்கிய அந்த சின்னஞ்சிறு பாலகனின் அலறல் சப்தம் இன்னுமா தங்களது செவிப்பறையில் வந்து மோதவில்லை ?????

Friday, October 27, 2006

இன்னுயிர் தந்து அரசை எழுப்பிய குழந்தை நந்தினி

நந்தினி என்ற அந்தப் பிஞ்சுக் குழந்தை தனது உயிரை விலையாகக் கொடுத்து அரசாங்கத்தை விழித்து எழச் செய்துள்ளது.

தொடக்க கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ள புதிய உத்தரவில் இடம் பெற உள்ள முக்கிய அம்சங்கள் ஆவன:

# நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளிகள், சிறுவர்-சிறுமிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு முன்னதாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடமோ அல்லது உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடமோ கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.

# பள்ளியின் பெயர், சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் சிறுவர், சிறுமிகள் பற்றிய விவரம் சுற்றுலா செல்லும் இடங்கள் சிறுவர்களுடன் செல்லும் ஆசிரியர்களைப் பற்றிய விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய மனுவை, அதிகாரிகளிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

# அதற்கு கல்வித்துறை அலுவலர் அனுமதி அளித்தால் மட்டுமே குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல முடியும். அனுமதி மறுத்தால் சுற்றுலா செல்லக் கூடாது. அப்படி மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

# அதன்படி, தினமும் ஒரு ஆசிரியர் பள்ளி வளாகத்தைச் சுற்றி பார்வையிட்டு, வளாகத்தில் உள்ள குறைகளை தனி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். குறைகளில் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது, மேற்கண்ட பதிவேடுகளைக் காட்ட வேண்டும்.

இந்த உத்தரவுகள் விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட உள்ளன, என இன்றைய தினமலர் செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளது.

வழக்கம் போல 'கடுமை' உத்தரவோடு மட்டும் நின்றுவிடாமல் அதை செயல்படுத்துவதிலும் தொடரவேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல், ஆரம்பப்பள்ளிக் குழந்தைகளின் போக்குவரத்திற்கான ஏற்பாடுகளை பள்ளிகள் கட்டாயம் செய்தாக வேண்டும். கட்டணத்தை அரசாங்கமே நிர்ணயம் செய்யவேண்டும். அதை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது மாநகர போக்குவரத்துக் கழகம் "மகளிர் மற்றும் சிறுவர்களுக்கென தனிப்பட்ட சேவைப் பேருந்துகளை அங்கொன்றும் எங்கொன்றுமாக ஏதோ பெயரளவில் இயக்குகிறது.

பள்ளி ஆரம்பிக்கும் மற்றும் முடியும் நேரங்களில் அதிகளவு பேருந்துகளை "பள்ளி மாணவர்களுக்கு" மட்டும் என இயக்க வேண்டும். பேருந்து நடத்துனருக்கு குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற நடத்தை நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பள்ளிகளின் நிர்வாகக் குறைபாடு மற்றும் விதிமுறை மீறல் ஆகியவற்றின் மீதான வழக்குகளுக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து விரைவில் தண்டனை வழங்க வேண்டும். நீதிமன்றம் மனது வைத்தால் இதைச் செய்ய முடியும். சமீபத்தில் கொலை வழக்குகளுக்கு பல்வேறு நீதிமன்றங்கள் பதினைந்து நாள், பத்து நாள், இரண்டு நாள், ஏன் -- ஐந்து மணிநேரத்தில் தீர்ப்பளித்து 'சாதனை' படைத்ததாக செய்திகள் வருகின்றன. கும்பகோணம் தீ விபத்து பற்றிய வழக்கு நேற்றைக்கு கூட விசாரணைக்கு வந்து மீண்டும் 'தள்ளிவைக்கப்பட்டுள்ளது'. ஆண்டுகள் இரண்டு கடந்து போய்விட்டன.


நந்தினி, இனி இது போன்ற மரணம் ஒரே ஒரு குழந்தைக்கும் நேராது பார்த்துக் கொள்வோம் மகளே!

Thursday, October 19, 2006

இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது


இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது.

நான் சொல்ல வருவது, திங்கள் அன்று சென்னை அண்ணா நகர் குட்டையில் விழுந்து D.A.V. பள்ளியைச் சேர்ந்த குழந்தை மரணமடைந்த பெருந்துயர சம்பவத்தைதான்.

கோபாலபுரத்தில் அமைந்த D.A.V. பள்ளியில் சேர்க்கை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. முதல் நாள் இரவே நெடிய வரிசையில் நின்று
விண்ணப்பம் வாங்கி, சிபாரிசு செய்ய உயர்ந்த மனிதர்களை பிடித்து, சில பத்தாயிரங்களை கொட்டிக் கொடுத்து அழுத பின்னர் மட்டுமே ஒரு குழந்தை அந்த பள்ளியில் கால் வைக்க முடியும்.

நினைத்து பாருங்கள், அதன் பெற்றோர் எத்தனை வண்ணக் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பர்.

திங்கட்கிழமை (16/10/2006) இந்த பள்ளியில் இருந்து இன்பச்(!!!) சுற்றுலாவிற்கு அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா சென்றுள்ளனர். 140 குழந்தைகளுடன் நெடிதுயர்ந்த டவருக்கு சென்றதே முதல் குற்றம். நான்கு ஆசிரியைகளும், ஒரு ஆயாவும், இந்த 140 குழந்தைகளை பூங்காவிற்கு
நடத்திச்சென்றுள்ளனர். விதிமுறைகளின் படி சுற்றுலா செல்லும்போது 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் கண்காணிப்பிற்கு.
ஆனால் நாம் தான் விதிமுறைகளை -- முக்கியமாக குழந்தைகள் விஷயத்தில் -- காற்றில் பறக்க விடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றோமே! யாரோ பெற்ற குழந்தைகள் தாமே!!

இந்த பூங்காவினுள் இரண்டு தாமரைக்குட்டைகள் இருக்கும். இந்த குட்டைகள் முழு கொள்ளளவிற்கு (பெரியவர்களின் இடுப்பு வரை) பச்சைப் பசேல் என்ற பாசியுடன் நிரம்பி இருக்கின்றன. பெரியவர்களால் மட்டுமே, அதுவும் கூட பலமுறை இந்தப் பூங்காவிற்கு வந்தவர்களால் மட்டுமே, இந்த
குட்டையின் தண்ணீருக்கும், அதன் பக்கத்து புல் தரைக்கும் வித்தியாசம் காண முடியும். இப்படி இருக்க பூங்காவிற்கு அழைத்து சென்ற
ஆசிரியர்கள் குறைந்தபட்சம் இந்த குட்டை இருக்கும் பகுதியையாவது தவிர்த்திருக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கும்
இங்கு கண்டிக்கப்படவேண்டும். இந்த குட்டைக்கு முறையான தடுப்பு அமைக்கப்படவில்லை. இந்தப் பூங்காவின் சீரமைப்பு பணியினை மேற்கொண்டு வந்ததாகக் கூறும் மாநகராட்சியினர், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததாக சால்ஜாப்பு கூறுகின்றனர்.


நந்தினி என்ற அந்த நான்கு வயது குழந்தை மூழ்கி இறந்தது நெடுநேரம் வரையில் ஆசிரியைகளல் அறியப்படவேயில்லை. வண்டியில் ஏறிய பின்னர்
ரோல் கால் செய்யும் போது குழந்தை காணாமல் போனது அறியப்பட்டு, பூங்கா முழுக்கத் தேடி கடைசியில் குட்டையில் பிணமாகக் கண்டெடுத்து
இருக்கின்றனர்.
கும்பகோணம் சம்பவத்தில் சற்றேறக்குறைய ஒரு நூறு குழந்தைகளை தீயிலிட்டு கொன்ற பள்ளி நிர்வாகம், ஆண்டுகள் இரண்டாகியும், பெரிதான
தண்டனை ஏதும் அடையவில்லை. ஓலைக்குடிசையில் வகுப்பு அமைக்க ஒப்புதல் கொடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு என்ன தண்டனை --
வருடந்தோறும் தணிக்கையின் போது அந்தப் பள்ளியின் வசதிக்குறையை மூடி மறைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? கையூட்டு
பெற்றுத்தானே இந்த பாதகத்தை செய்திருப்பார்கள்? அந்த அதிகாரிகளின் வீட்டில் பொங்கும் ஒவ்வொரு சோற்று பருக்கையும் குழந்தைகளின்
சதைப் பொசுங்கும் நாற்றத்துடன் தானே திகழ்ந்து கொண்டிருக்கும் ?
இந்தக் கொடுஞ்சம்பவத்திற்குப் பின்னரும் எத்தனை குழந்தைகளை பள்ளி நிர்வாகங்களின் அலட்சிய போக்கிற்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் புகழ்பெற்ற பெயின் (CSI Bain) பள்ளியில் நர்சரி வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தை, seesaw என்னும் விளையாட்டில் இருந்த போது, கம்பி குத்தி அவ்விடத்திலேயே மரணம் அடைந்தான். இதில் விளையாடும் குழந்தைகள் பிடித்துக்கொள்வதற்கு தோதாக வடிவில் கம்பி இருக்கும். ஆனால் அந்த பள்ளியில் கம்பியில் பகுதி உடைந்து போய் பல நாளாகி இருக்கிறது. வெறும் பகுதி மட்டுமே இருந்துள்ளது. மேலே சென்ற இருக்கை தாழ்ந்து தரையை மோதும் போது இந்த கம்பி அந்த குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தது. எத்தனை பெரிய கொடுமை! இவ்வளவிற்கு பின்னரும் அந்தப் பள்ளி, பொறுப்பை தட்டி கழித்து, மாணவனின் அராஜகத்தினால் மரணம் நிகழ்ந்தது என்று கூசாமல் சொல்லியது. குழந்தையிடம் ஜாக்கிரதையை எதிர்பார்க்கிறார்கள் இந்த கயவர்கள்.

பல சம்பவங்கள். எத்தனை வேன் விபத்துக்கள் நடந்து விட்டன! ஒரு சிறிய வேனில் ஆட்டு மந்தையென பிள்ளைகளை அடைத்து காசு பார்க்கும்
பள்ளிகள். அந்த வேன்கள் கூட சரியான பராமரிப்பின்றியும் கவனக்குறைவாலும், கடந்த சில மாதங்களில் நிறைய விபத்துகளை சந்தித்தன. அந்த வேன் விபத்துகளின் பிறகு சிறிது நாட்கள் சில உத்தரவுகளை போட்டது அரசு! அவ்வளவே தான். இப்போது வழக்கம் போல் பள்ளிகள் விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு ஆட்டோக்கள். ஒரு ஆட்டோவில் 15 குழந்தைகளைக் கூட அழைத்துப்போகிறார்கள். நெஞ்சு பதைக்கிறது இந்த காட்சிகளை பார்க்கும் போது. உண்மையை சொல்லப்போனால் ஒரு குருட்டதிர்ஷ்டத்தில் தான் வீடு வந்து சேர்கின்றன ஒவ்வொரு குழந்தையும். போருக்கு செல்லும் ராணுவத்தினர் கூட பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விடுவார்கள் போலும்; நம் குழந்தைகள் பள்ளி சென்று வீடு திரும்புவது என்பது நிச்சியமில்லை.

ஒவ்வொரு பள்ளியும் கல்விக் கட்டணம் என கணிசமான ஒரு தொகையை வசூலிக்கிறார்களே. அதனுடன் சேர்த்து ஒரு நியாயமான போக்குவரத்து
கட்டணத்தை வசூலித்து, போதிய வேன், பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்தால், பெற்றோர்கள் ஏன் ஆட்டோவை நம்பி இருக்கப்போகிறார்கள்?
பெரும்பாலான பள்ளிகளில் போக்குவரத்து கட்டணம் என்று வசூலிப்பது மிகப்பெரியத் தொகை. எரிபொருள் செலவு, ஓட்டுனர் சம்பளம்,
வண்டிகளின் தேய்மானம் என்று எப்படி கணக்கு பார்த்தாலும், ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு 100 ரூபாய்க்கு மேல் ஆகவே ஆகாது. ஆனால் பல
பள்ளிகளில் கட்டணம் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை செல்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் காசு பிடுங்க வேண்டும் என்ற வெறி.

மிகச் சாதரணமானவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் பேருந்தை நம்பியே இருக்கின்றனர். இந்த மாணவர்கள் ஏறும் வரை கூட பொறுமையாக
இருக்க முடியாமல் விசில் ஊதும் நடத்துனர்கள் அநேகம். சில நாட்களுக்கு முன்னர் பேருந்தில் நான் பயணம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு
நிறுத்தத்தில் நிறைய பள்ளி மாணவர்கள் ஏறினர். அவ்வளவு பேரும் சுமார் ஏழு முதல் பத்து வயதிற்கு உட்பட்ட சுட்டிக் குழந்தைகள். பெரும்
சப்தத்துடன் தங்களுக்குள் பேசிக்கொண்டும், சிறு சண்டைகள் இட்டுக் கொண்டும், கவலையின்றி வந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் தானே! இது
அவர்கள் இயல்பு தானே! சில குழந்தைகள் தங்கள் விளையாட்டினால் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டிருந்த பயணிகள் மீது சாய்ந்து கொண்டும்,
இடித்துக் கொண்டும் வந்தனர். வந்தார் நடத்துனர், இரண்டு மூன்று குழந்தைகளின் கன்னங்களில் பளார் என்று அரைந்தார். சில பயணிகள்
அவருக்கு துணையாக, "ஆமாம் சார், அப்படித்தான், கொடுங்கள் நன்றாக, அப்போது தான் இந்த எமன்கள் அடங்கும்" என்று சொன்னார்கள். யார்
எமன்கள்? இந்த நியாயவான்கள் தங்கள் பிள்ளைப்பருவத்தில் தத்தமது வாலினை சுருட்டி குண்டியில் அடக்கிக் கொண்டார்களா என்ன ?

மிகக் கடுமையான சட்டம் கொண்டுவருவது மட்டும் என நிறுத்திக் கொள்ளாமல் அதை முழுவதுமாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு குழு அமைத்து, பாரபட்சம், தயவு தாட்சண்யம் இல்லாமல் அரசு செயல்பட்டால் ஒரு வேளை இந்த வன்முறை ஒழிக்கப்படக்கூடும். எந்த சட்டம் கொண்டுவந்தாலும் பொசுக்கென்று நீதிமன்றங்களுக்கு சென்று தடைவாங்கி விட முடிவது மற்றொரு அவலம்.

புத்தாடை

அடுத்த தீபாவளியின்
புதுத்துணியை இப்போதே
காணும் பாக்கியம்
உண்டோ உங்களுக்கு?
எனக்கு உண்டு.
கரும்பச்சை நிறத்தில்
காற்சட்டை
கிளிப்பச்சை நிறத்தில்
முழுச்சட்டை.
கைமடிப்பிலோ
காலர் ஓரத்திலோ
சட்டைப் பையின்
அருகிலோ
கால் மூட்டிலோ
இடுப்பு வார்பட்டியின்
இரண்டொரு காதுகளிலோ
கிழிசல் ஏற்பட்டு, சற்றே
சாயம் மங்கி
அடுத்த தீபாவளிக்குள்
என்னிடம் வந்துவிடும்
சின்ன அய்யாவின்
புத்தாடை

நமது வன்முறைக்கு மற்றொரு குழந்தை பலியாகிவிட்டது


இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது.

நான் சொல்ல வருவது, திங்கள் அன்று சென்னை அண்ணா நகர் குட்டையில் விழுந்து D.A.V. பள்ளியைச் சேர்ந்த குழந்தை மரணமடைந்த பெருந்துயர சம்பவத்தைதான்.

கோபாலபுரத்தில் அமைந்த D.A.V. பள்ளியில் சேர்க்கை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. முதல் நாள் இரவே நெடிய வரிசையில் நின்று
விண்ணப்பம் வாங்கி, சிபாரிசு செய்ய உயர்ந்த மனிதர்களை பிடித்து, சில பத்தாயிரங்களை கொட்டிக் கொடுத்து அழுத பின்னர் மட்டுமே ஒரு குழந்தை அந்த பள்ளியில் கால் வைக்க முடியும்.

நினைத்து பாருங்கள், அதன் பெற்றோர் எத்தனை வண்ணக் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பர்.

திங்கட்கிழமை (16/10/2006) இந்த பள்ளியில் இருந்து இன்பச்(!!!) சுற்றுலாவிற்கு அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா சென்றுள்ளனர். 140 குழந்தைகளுடன் நெடிதுயர்ந்த டவருக்கு சென்றதே முதல் குற்றம். நான்கு ஆசிரியைகளும், ஒரு ஆயாவும், இந்த 140 குழந்தைகளை பூங்காவிற்கு
நடத்திச்சென்றுள்ளனர். விதிமுறைகளின் படி சுற்றுலா செல்லும்போது 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் கண்காணிப்பிற்கு.
ஆனால் நாம் தான் விதிமுறைகளை -- முக்கியமாக குழந்தைகள் விஷயத்தில் -- காற்றில் பறக்க விடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றோமே! யாரோ பெற்ற குழந்தைகள் தாமே!!

இந்த பூங்காவினுள் இரண்டு தாமரைக்குட்டைகள் இருக்கும். இந்த குட்டைகள் முழு கொள்ளளவிற்கு (பெரியவர்களின் இடுப்பு வரை) பச்சைப் பசேல் என்ற பாசியுடன் நிரம்பி இருக்கின்றன. பெரியவர்களால் மட்டுமே, அதுவும் கூட பலமுறை இந்தப் பூங்காவிற்கு வந்தவர்களால் மட்டுமே, இந்த
குட்டையின் தண்ணீருக்கும், அதன் பக்கத்து புல் தரைக்கும் வித்தியாசம் காண முடியும். இப்படி இருக்க பூங்காவிற்கு அழைத்து சென்ற
ஆசிரியர்கள் குறைந்தபட்சம் இந்த குட்டை இருக்கும் பகுதியையாவது தவிர்த்திருக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கும்
இங்கு கண்டிக்கப்படவேண்டும். இந்த குட்டைக்கு முறையான தடுப்பு அமைக்கப்படவில்லை. இந்தப் பூங்காவின் சீரமைப்பு பணியினை மேற்கொண்டு வந்ததாகக் கூறும் மாநகராட்சியினர், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததாக சால்ஜாப்பு கூறுகின்றனர்.


நந்தினி என்ற அந்த நான்கு வயது குழந்தை மூழ்கி இறந்தது நெடுநேரம் வரையில் ஆசிரியைகளல் அறியப்படவேயில்லை. வண்டியில் ஏறிய பின்னர்
ரோல் கால் செய்யும் போது குழந்தை காணாமல் போனது அறியப்பட்டு, பூங்கா முழுக்கத் தேடி கடைசியில் குட்டையில் பிணமாகக் கண்டெடுத்து
இருக்கின்றனர்.
கும்பகோணம் சம்பவத்தில் சற்றேறக்குறைய ஒரு நூறு குழந்தைகளை தீயிலிட்டு கொன்ற பள்ளி நிர்வாகம், ஆண்டுகள் இரண்டாகியும், பெரிதான
தண்டனை ஏதும் அடையவில்லை. ஓலைக்குடிசையில் வகுப்பு அமைக்க ஒப்புதல் கொடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு என்ன தண்டனை --
வருடந்தோறும் தணிக்கையின் போது அந்தப் பள்ளியின் வசதிக்குறையை மூடி மறைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? கையூட்டு
பெற்றுத்தானே இந்த பாதகத்தை செய்திருப்பார்கள்? அந்த அதிகாரிகளின் வீட்டில் பொங்கும் ஒவ்வொரு சோற்று பருக்கையும் குழந்தைகளின்
சதைப் பொசுங்கும் நாற்றத்துடன் தானே திகழ்ந்து கொண்டிருக்கும் ?
இந்தக் கொடுஞ்சம்பவத்திற்குப் பின்னரும் எத்தனை குழந்தைகளை பள்ளி நிர்வாகங்களின் அலட்சிய போக்கிற்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் புகழ்பெற்ற பெயின் (CSI Bain) பள்ளியில் நர்சரி வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தை, seesaw என்னும் விளையாட்டில் இருந்த போது, கம்பி குத்தி அவ்விடத்திலேயே மரணம் அடைந்தான். இதில் விளையாடும் குழந்தைகள் பிடித்துக்கொள்வதற்கு தோதாக வடிவில் கம்பி இருக்கும். ஆனால் அந்த பள்ளியில் கம்பியில் பகுதி உடைந்து போய் பல நாளாகி இருக்கிறது. வெறும் பகுதி மட்டுமே இருந்துள்ளது. மேலே சென்ற இருக்கை தாழ்ந்து தரையை மோதும் போது இந்த கம்பி அந்த குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தது. எத்தனை பெரிய கொடுமை! இவ்வளவிற்கு பின்னரும் அந்தப் பள்ளி, பொறுப்பை தட்டி கழித்து, மாணவனின் அராஜகத்தினால் மரணம் நிகழ்ந்தது என்று கூசாமல் சொல்லியது. குழந்தையிடம் ஜாக்கிரதையை எதிர்பார்க்கிறார்கள் இந்த கயவர்கள்.

பல சம்பவங்கள். எத்தனை வேன் விபத்துக்கள் நடந்து விட்டன! ஒரு சிறிய வேனில் ஆட்டு மந்தையென பிள்ளைகளை அடைத்து காசு பார்க்கும்
பள்ளிகள். அந்த வேன்கள் கூட சரியான பராமரிப்பின்றியும் கவனக்குறைவாலும், கடந்த சில மாதங்களில் நிறைய விபத்துகளை சந்தித்தன. அந்த வேன் விபத்துகளின் பிறகு சிறிது நாட்கள் சில உத்தரவுகளை போட்டது அரசு! அவ்வளவே தான். இப்போது வழக்கம் போல் பள்ளிகள் விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு ஆட்டோக்கள். ஒரு ஆட்டோவில் 15 குழந்தைகளைக் கூட அழைத்துப்போகிறார்கள். நெஞ்சு பதைக்கிறது இந்த காட்சிகளை பார்க்கும் போது. உண்மையை சொல்லப்போனால் ஒரு குருட்டதிர்ஷ்டத்தில் தான் வீடு வந்து சேர்கின்றன ஒவ்வொரு குழந்தையும். போருக்கு செல்லும் ராணுவத்தினர் கூட பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விடுவார்கள் போலும்; நம் குழந்தைகள் பள்ளி சென்று வீடு திரும்புவது என்பது நிச்சியமில்லை.

ஒவ்வொரு பள்ளியும் கல்விக் கட்டணம் என கணிசமான ஒரு தொகையை வசூலிக்கிறார்களே. அதனுடன் சேர்த்து ஒரு நியாயமான போக்குவரத்து
கட்டணத்தை வசூலித்து, போதிய வேன், பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்தால், பெற்றோர்கள் ஏன் ஆட்டோவை நம்பி இருக்கப்போகிறார்கள்?
பெரும்பாலான பள்ளிகளில் போக்குவரத்து கட்டணம் என்று வசூலிப்பது மிகப்பெரியத் தொகை. எரிபொருள் செலவு, ஓட்டுனர் சம்பளம்,
வண்டிகளின் தேய்மானம் என்று எப்படி கணக்கு பார்த்தாலும், ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு 100 ரூபாய்க்கு மேல் ஆகவே ஆகாது. ஆனால் பல
பள்ளிகளில் கட்டணம் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை செல்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் காசு பிடுங்க வேண்டும் என்ற வெறி.

மிகச் சாதரணமானவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் பேருந்தை நம்பியே இருக்கின்றனர். இந்த மாணவர்கள் ஏறும் வரை கூட பொறுமையாக
இருக்க முடியாமல் விசில் ஊதும் நடத்துனர்கள் அநேகம். சில நாட்களுக்கு முன்னர் பேருந்தில் நான் பயணம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு
நிறுத்தத்தில் நிறைய பள்ளி மாணவர்கள் ஏறினர். அவ்வளவு பேரும் சுமார் ஏழு முதல் பத்து வயதிற்கு உட்பட்ட சுட்டிக் குழந்தைகள். பெரும்
சப்தத்துடன் தங்களுக்குள் பேசிக்கொண்டும், சிறு சண்டைகள் இட்டுக் கொண்டும், கவலையின்றி வந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் தானே! இது
அவர்கள் இயல்பு தானே! சில குழந்தைகள் தங்கள் விளையாட்டினால் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டிருந்த பயணிகள் மீது சாய்ந்து கொண்டும்,
இடித்துக் கொண்டும் வந்தனர். வந்தார் நடத்துனர், இரண்டு மூன்று குழந்தைகளின் கன்னங்களில் பளார் என்று அரைந்தார். சில பயணிகள்
அவருக்கு துணையாக, "ஆமாம் சார், அப்படித்தான், கொடுங்கள் நன்றாக, அப்போது தான் இந்த எமன்கள் அடங்கும்" என்று சொன்னார்கள். யார்
எமன்கள்? இந்த நியாயவான்கள் தங்கள் பிள்ளைப்பருவத்தில் தத்தமது வாலினை சுருட்டி குண்டியில் அடக்கிக் கொண்டார்களா என்ன ?

மிகக் கடுமையான சட்டம் கொண்டுவருவது மட்டும் என நிறுத்திக் கொள்ளாமல் அதை முழுவதுமாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு குழு அமைத்து, பாரபட்சம், தயவு தாட்சண்யம் இல்லாமல் அரசு செயல்பட்டால் ஒரு வேளை இந்த வன்முறை ஒழிக்கப்படக்கூடும். எந்த சட்டம் கொண்டுவந்தாலும் பொசுக்கென்று நீதிமன்றங்களுக்கு சென்று தடைவாங்கி விட முடிவது மற்றொரு அவலம்.

Wednesday, October 18, 2006

சுடுகிறது நிஜம்


குழந்தைக்கு நிலா காட்டி
வடை சுடும் பாட்டி
கதையை சொல்லி
சோறூட்டிய மனைவியிடம்
இன்னும் எத்தனை
குழந்தைகள் சோறுண்ண
பாட்டி வடை சுடுவாளோ
கதையை மாத்துடி என்றேன்.
நல்ல வேளை . . .
அண்ணாவின் டாக்டர் படிப்பு
தங்கையின் திருமணம்
என்னுடைய வெளிநாட்டு
கணிப்பொறி வேலை
இத்தனைக்குப் பின்னரும்
கூனல் முதுகுடனும்
ஒட்டிய கன்னங்களுடனும்
இன்னும் கிராமத்தில்
இட்லி சுடும்
அம்மா பற்றி என்னிடம்
ஏதும் கேட்கவில்லை
என் மனசாட்சி

Tuesday, October 17, 2006

அருக்கம்



ஆழ்துளைக் கிணறு
தோண்டுவதை
பார்க்க பார்க்க
ஆர்வம் கூடியது.
பத்தடி இருபது அடி
ஐம்பது அடி எழுபது அடி
நூறு அடியில்
தண்ணீர் கிடைத்தது.

இன்னும் சில அடிகள்
தோண்டினால் எண்ணெய்
கிடைக்கலாம்
ஏன் வைரம் கூட
கிடைக்கலாம்.

ஆனால் பூமிப்பந்தின்
மறுமுனை வரை தோண்டினாலும்
கிடைக்கவே போவதில்லை
பள்ளி பருவத்தில்
நாங்கள் விரல்களால்
நிலம் கீறி கண்டெடுத்து
விளையாடி மகிழ்ந்த
மண்
புழு

Monday, October 16, 2006

ஞாபகம் வந்தது

பிரசவ வேதனையில்
கையால் மெத்தைகிழித்து
மனைவி அலறித்
துடித்த போதும் . . .

பஞ்சுப் பொதியினுள்
பட்டு ரோஜாவாய்
என் மகனை
செவிலிப் பெண்
என்னிடம் காட்டியபோதும் . . .

அப்பா என முதன்முதலில்
அவன் குழல் தோற்கும்
பிஞ்சு மொழியில்
எனை அழைத்த போதும் . . .

பள்ளியில் மகனை
முதல் நாள் அமர வைத்து
இனம்புரியா உணர்ச்சியுடன்
கண்ணோரம் துளிர்த்தநீருடன்
விடைபெற்ற போதும் . . .

காய்ச்சலில் அவதிப்பட்ட
பத்துவயது மகளை
இடுப்பில் சுமந்து கொண்டு
பக்கத்து தெரு மருத்துவரிடம்
மனைவி ஓடியபோதும் . . .

ஊரெல்லாம் தீபாவளி
கலைகட்டியிருக்க இரவுமுழுதும்
அலைந்து எப்படியோ
திரட்டிய பணத்தில்
பட்டாசு புதுத்துணியுடன்
குழந்தைகள் முன்நின்று
அவர்கள் ஓடிவந்து எனது
கால்களை கட்டிக்கொண்டபோதும் . . .

ஸ்கூட்டர் பழகுகிறேன்
என்று கீழே விழுந்து
உடம்பெல்லாம் அடிபட்ட
பதினெட்டு வயது மகனை
அவன் கூச்சப்படப்பட
குளிப்பாட்டி, சோறூட்டி
மனைவி கவனித்தபோதும் . . .

நல்ல வேலை, கைநிறைய
சம்பளம் என்று
அயல்நாட்டில் கிடைத்த
வேலைக்கு கிளம்பிய
மகனை விமானநிலையத்தில்
கட்டியணைத்து உச்சிமுகர்ந்தபோதும் . . .

திருமணம் முடித்து மகளை
புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி
அடுத்தடுத்த நாட்களில்
என் மடிமீது மனைவியும்
அவள் மடிமீது நானும்
முகம் புதைத்து விம்மி
கதறியபோதும் . . .

தகவல் சொல்லாமல்
திடீரென வந்துவிட்ட
பக்கவாதத்தால் தாக்கப்பட்டு
படுக்கையில் நான்
முடங்கிப்போக -- சோறுடனும்
பாலுடனும், நம்பிக்கையையும்
எனக்கு ஊட்டி மனைவி
எனைத் தழுவிக் கொண்டபோதும் . . .

சத்திய தரிசனமாய்
நான் உணர்ந்து கொண்டேன்
என் பெற்றோரின் அன்பை.

Saturday, October 14, 2006

அச்சாரம்

திடும் திடுமென விரையும்
தொடர்வண்டியின்
இரைச்சலை மீறி
எழுந்தது ஒரு பிள்ளையின்
குரல் -- "பசிக்குது"

ஒரு கை இல்லாத அந்த
குழந்தையின் குரல்
பரிதாபமாகத்தான் இருந்தது
நிஜத்தில்.
கைப்பை திறந்து பணம்
கொடுத்த மனைவிக்கு
தெரியாது -- பாவம்
இந்த பணம் மற்றொரு
குழந்தையின் கை அறுப்பிற்கு
கொடுக்கப்படும்
அச்சாரம் என்று.

Monday, September 18, 2006

மதிப்பு

மாதக் கடைசி
பசி வயிற்றை கிள்ளி
காதை அடைக்கிறது ...
ஒரு தேநீராவது இருந்தால்
தேவலைதான்.
செலவு செய்ய மனமில்லை
சட்டைப் பையின் ஓரத்தில்
அப்பா கடைசியாய் கொடுத்த
பத்து ரூபாய்.

Tuesday, July 04, 2006

சிங்கத்தின் கர்ஜனை

இன்று சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள்.

இதோ எனது குருநாதரின் வீரம் நிறைந்த சில வரிகள்:

உலக சகோதரத்துவத்தைப்பற்றி நாம் கேள்விப்படுகிறோம். சமுதாயங்கள் வரிந்துகட்டிக் கொண்டு இதைப்பிரச்சாரம் செய்கின்றன. எனக்கு ஒரு
பழைய கதை நினைவுக்கு வருகிறது. குடிப்பது இந்தியாவில் தவறாகக் கருதப்படுகிறது. இரண்டு சகோதரர்கள் ஒரு நாள் இரவு ரகசியமாகக் குடிக்கத் தீர்மானித்தார்கள். மிகவும் ஆசாரசீலரான அவர்களுடைய மாமா பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். ஆகவே குடிக்கத்
தொடங்குவதற்கு முன்னால், 'நாம் சத்தம் செய்யக்கூடாது, சத்தம் போட்டால் மாமா எழுந்து விடுவார்' என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டாகள்.
பின்னர் குடிக்கத் தொடங்கினார்கள். 'சத்தம் போடாதே, மாமா எழுந்து விடுவார்' என்று ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். இதையே
ஒருவனைவிட மற்றவன் உரத்துச் சொல்ல ஆரம்பித்தான். சத்தம் அதிகமாகியது, மாமா எழுந்து வந்து எல்லா விஷயத்தையும் கண்டு
பிடித்துவிட்டார். அந்த குடிகாரர்களைப் போலவே நாமும், 'உலகச் சகோதரத்துவம், நாம் எல்லோரும் சமம், ஆகவே நாம் ஒரு புது நெறியை
ஏற்படுத்துவோம்' என்று கூச்சலிடுகிறோம். புதிய நெறியைத் தொடங்கியவுடனேயே சமத்துவத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறோம். அதன் பிறகு
சமத்துவமாவது ஒன்றாவது!

சத்திரியர்கள் இறைச்சி உண்பதுபற்றிப் பேசுகிறீர்கள். அவர்கள் மாமிசம் சாப்பிட்டார்களோ இல்லையோ, ஆனால் அவர்கள்தான் இந்து மதத்தில்
சிறந்தவையாக உன்னதமானவையாக உள்ள அனைத்திற்கும் தந்தையர். உபநிடதங்களை எழுதியது யார்? ராமன் யார்? கிருஷ்ணன் யார்? புத்தர்
யார்? சமணர்களின் தீர்த்தங்கரர்கள் யார்? ஒரு துண்டு
இறைச்சியை உண்டதால் தமது அருள் வெள்ளத்தை ஒருவன் மீது பாய்சாமல் இருக்கத்தக்க ஒரு நரம்புத்தளர்ச்சி உள்ள நோயாளியா கடவுள்?
அப்படி ஒருவர் கடவுளாக இருந்தால் அவர் ஒரு காசுக்குக்கூட மதிப்புப் பெறாதவர்.

முழுவேலையும் உங்கள் தோள்மீதே இருப்பதாக எண்ணுங்கள். எனது தாய்நாட்டு இளைஞர்களே, இதைச் சாதிப்பதற்காக விதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று நினையுங்கள். களத்தில் இறங்குங்கள், கடவுள் உங்களுக்கு அருள்வார். என்னை விட்டுவிடுங்கள், கண்காணாதபடி என்னைத் தூக்கியெறிந்துவிடுங்கள். புதிய லட்சியத்தை, புதிய கோட்பாட்டை, புதிய வாழ்க்கையைப் பிரச்சாரம் செய்யுங்கள். எனது வீரமிக்க, உறுதியான, அன்பு நிறைந்த குழந்தைகளே, அனைவருக்கும் எனது ஆசிகள்.

Monday, July 03, 2006

அப்பா

எனக்கு கவிதை எழுத வராது. இருந்தாலும் அவ்வப்போது மனதில் பொங்கும் உணர்வுகளை ஞாபக ஏட்டில் பதிந்து வைப்பது வழக்கம். உரைநடையில், ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி கவிதை என்று எனக்கு நானே திருப்தி பட்டுக்கொள்வேன்.

இன்று முதன்முதலில் எனது வலைப்பதிவை தொடங்குகிறேன். அதுவும் என் தாய்மொழியில். பேனா வாங்கினால் முதலில் "அப்பா" என்று எழுதி பார்ப்பது எனது வழக்கம். இந்த முதல் பதிவையும் அப்பா என்றே தொடங்குகிறேன், 'அந்த ஒரு நாளில்' என் ஞாபகத்தில் கிறுக்கிய ஒரு கவிதையுடன் ...

சுற்றிலும் அழுகைக் குரல்கள்--
பயமாக இருந்தது.
அப்பா நானும் உங்களுடன்
வருகிறேன் என்றேன்.
இங்கேயே இரு இப்போது
வந்துவிடுவேன் எனச் சொல்லி
முதல் நாள் பள்ளியில் எனை
விட்டுச் சென்றீர்கள்.

கலங்கிய விழிகளுடன் காத்திருந்தேன்
நெடு நேரம் கழித்து வந்தீர்கள்
சொன்னபடி அழைத்துச் சென்றீர்கள்.

இப்போதும்,
சுற்றிலும் அழுகைக் குரல்கள்--
கலங்கிய விழிகளுடன் காத்து
இருக்கிறேன்.
எப்போது வருவீர்கள் அப்பா ?