Monday, December 18, 2006

சிலுவையில் அறையப்படும் மாணவர்கள்

மயூரன் என்ற அந்த பதினேழு வயது குழந்தை இன்னமும் என் நினைவை விட்டு அகல மறுக்கிறான். சொற்ப முறையே அவனை நான் சந்தித்து இருந்தாலும், அவனுடைய ஆழ்ந்த அறிவு எனக்கு மிகவும் பிடித்து போயிற்று. என்னுடைய மாமன் மகன் வினோத்தின் வகுப்புத் தோழன் அவன். இந்த ஆண்டின் தொடக்கித்தில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதினார்கள். ஒவ்வொரு தேர்வு நாளிலும் காலையிலேயே எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்கள். என் தாய் அவர்கள் இருவரையும் அருகாமையில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு வருவார்கள். வினோத் என்னை 'மச்சான்' என்று முறைவைத்து அழைத்ததால் மயூரனும் என்னை மச்சான் என்றே அழைப்பான். "C.A. படிக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஆராய்ச்சி செய்து ஒரு கண்டுபிடிப்பை கொடுக்க வேண்டும் மச்சான்" என்று அவன் தெளிவாகச் சொன்னது இன்னமும் கூட எனது செவியில் அவன் குரலிலேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது. தேர்வு முடிவுகள் வெளியான போது தொள்ளாயிரத்து தொண்ணூறு எடுத்திருந்தான். ஆயிரத்திற்கு பத்து மதிப்பெண்கள் மதிப்பெண்கள் குறைவு. இது ஒன்றும் மோசமான எண்ணிக்கையாக இல்லாமல் இருந்தாலும், அவன் மிகவும் உடைந்து போனான்.


அவன் அதிகமாக எதிர்பார்த்திருப்பான் போல. "நீ எதிர்பார்க்கும் எந்த முன்னணி கல்லூரியிலும் இடம் கிடைக்காது. ஏதாவது ஒரு டப்பா கல்லூரியில் மாலை நேர வகுப்புகளில் இடம் கிடைக்கலாம்" என்று நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். ரொம்பவும் நொருங்கிப் போனான். இதை அறிந்த நான் வினோத்திடம் மயூரனை அழைத்து வரும்படி கூறினேன். எந்த கல்லூரியில் படித்தாலும் சாதிக்கத் துணிந்தவனுக்கு தடையொன்றும் இல்லை என்பதை அவனுக்கு புரியவைக்க வேண்டும் என திட்டமிட்டேன். அன்று இரவு எனக்கு தொலைபேசியில் வந்த செய்தி "மயூரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்."


அந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுக்க தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை இருபத்து மூன்று.


கடந்த ஐந்து மாதத்து செய்தித்தாள்களை புரட்டிப் பாருங்கள். மாணவர்களின் தற்கொலை புள்ளி விபரங்கள் தங்கள் இதயத்தை தீயிலிட்டு பொசுக்கி விடும்.


சேலத்தைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் (கல்லூரியில் நான்காம் ஆண்டு அல்ல -- பள்ளியில் வெறும் நான்காம் வகுப்பு) காலாண்டு கணக்குத் தேர்வில் தோல்வியுற்று தீக்குளித்தான். சென்னையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் வீட்டுப் பாடம் செய்யவில்லை. அதனால் பள்ளிக்கு போக மாட்டேன் என சொல்லியிருக்கிறான். அவனுடைய பெற்றோர், "நீ கட்டாயம் பள்ளிக்கு சென்றாக வேண்டும். போய் ஆசிரியரிடம் அடிவாங்கு அப்பத்தான் உனக்கு புத்தி வரும்" என சொல்லிவிட்டார்கள். சிறுவனும் பள்ளிக்கு செல்வது போல் பாசங்கு செய்து விட்டு, அவன் தாய் கடைக்கு சென்றிருந்த நேரம் பார்த்து, வீடு திரும்பி, அறையில் தூக்கிட்டுக் கொண்டான். பெற்றோர் அழுது புரண்டார்கள். பயன்?


நான்காம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவி பாடங்கள் கடுமையாக இருக்கிறது என்ற காரணத்தினால் தூக்கிட்டு கொண்டாள். மிக அண்மையில் -- இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வில் காப்பி அடித்து பிடிபட்டான். பெற்றோரை அழைத்து வந்தால் தான் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவாய் எனக் கூறிவிட்டார்கள் ஆசிரியர்கள். நேராக விடுதிக்கு வந்தவன் தூக்கில் தொங்கினான். இனி எத்தனை தவமிருந்தாலும் இவர்களை உயிர்பித்து விட முடியுமா?


சத்தியமாகச் சொல்கிறேன். கல்லூரி படிப்பு முடிக்கும் வயது வரை தூக்கிட்டுக்கொள்வது எப்படி என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒன்பது வயதுச் சிறுவனுக்கு தீக்குளிக்கத் தெரிகிறது. தூக்கிட்டுகொள்ளத் தெரிகிறது. எங்ஙணம்??


சர்வ நிச்சயமாய் இவற்றுக்கு காரணம் ஊடகங்களே. கொஞ்சமும் சமூக உணர்வற்ற ஊடகங்கள் தான். முன்பெல்லாம் செய்தித்தாள்களில் சாவுச் செய்திகளின் புகைப்படங்கள் அரிதாக இருக்கும், அப்படியே இருந்தாலும் அவ்வளவு தெளிவாக இருக்காது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தற்போது 'டைட் க்ளோசப்'பில் படங்கள் எடுக்கப்பட்டு பெரிது பெரிதாகப் போடப்படுகின்றன. தண்டவாளத்தில் தலைகொடுத்து தலை வேறு, உடல் வேறான பிணத்தின் புகைப்படம் பிரசுரிக்கப்படுகிறது. தற்கொலைக்கு செய்தித்தாள்களிலும் தொலைகாட்சிகளிலும் அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றன. இறந்தவர்களைச் சுற்றி அவர் பெற்றோரும் உறவினரும் வருந்திக் கதறவது நெடுநேரம் காண்பிக்கப்படுகிறது. இதை பார்க்கும் குழந்தைகளும் அப்படியான ஒரு கரிசனத்திற்கு ஏங்கி இது போன்ற ஒரு முடிவிற்கு வருகிறார்கள். இது போன்ற தற்கொலைச் செய்திகளை ஊடகங்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும்.


திரைப்படங்களிலும், சீரியல்களிலும் தற்கொலைக் காட்சிகள் தத்ரூபமாக காண்பிக்கப்படுகின்றன. கயிறை எப்படி முடிச்சிடுகிறார்கள், எப்படி கழுத்தில் இட்டுக் கொள்கிறார்கள், எங்ஙனம் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொள்கிறார்கள் என்பது அணு அணுவாக காண்பிக்கப்படுகிறது.


சரி இப்போது இந்தக் குழந்தைகளின் அடிப்படை பிரச்சனையை பார்ப்போம்


இன்றைய மாணவர் உலகத்தினை உற்று நோக்குங்கள். கண்ணீர் குளத்தினுள் மூழ்கி உங்கள் கண்கள் மரித்து போகக்கூடும். எட்டாம் வகுப்பு வரை தேர்வு முறைகூடாது என்பது சட்ட அளவிலேயே உள்ளது. எந்த பள்ளியும் இதைக் கிஞ்சிற்றும் மதிப்பது கிடையாது. K.G. வகுப்புகளுக்கு கூட காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டுத் தேர்வுகள் உள்ளன. நடுநடுவில் Mid-Term எனப்படும் குறுந்தேர்வுகள். காலை எழுந்தவுடன் படிக்கிறார்கள். பின்னர் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் குட்டு பட்டு, அடிவாங்கி படிக்கிறார்கள். மாலை வீடு திரும்பியவுடன், தனி வகுப்பு எனப்படும் Private Tuitions -- எட்டு மணிவரையில். பெரிய வகுப்புகளுக்கு ஒன்பது மணி வரையிலும் கூட. ஒரு கூலித் தொழிலாளி அயர்ச்சியுடன் படுக்கையில் விழுவது போல் விழுகிறார்கள். மீண்டும் காலை எழுந்து அதே அக்கப்போர். விடுமுறை நாட்களுக்கு கனத்த அளவில் வீட்டுப் பாடம் கொடுத்து சைக்கோத்தனமாக நடந்து கொள்கின்றன பள்ளிகள். முழு ஆண்டு விடுமுறை முழுக்க அந்தப் பயிற்சி, இந்தப் பயிற்சி, என அவர்களை எண்ணையிலிட்டு பொரிக்கிறார்கள் பெற்றோர். போட்டி நிறைந்த உலகினை எதிர்கொள்ள குழந்தைகளை தயார்படுத்துவதாக தங்களை சமாதானஞ் செய்து கொள்கிறார்கள்.


ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் நிலை மிகவும் மோசமானது. இவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் என எட்டு மணிவரை பள்ளியிலேயே வைத்துக் கொள்கிறார்கள். முழு ஆண்டு விடுமுறை இவர்களுக்கு இல்லவே இல்லை.


குழந்தைகளின் மெல்லிய சிறகுகளை கோடரி கொண்டு வெட்டி எறிகிறது இன்றைய கல்வி முறை.

இந்தக் குழந்தைகளின் முகங்களைப் பாருங்கள். மரண தண்டனை நிறைவேற்றப்பட அழைத்துச் செல்லப்படும் கைதியின் முகத்தைவிட இவர்களிடம் சவக்கலை மிகுந்து காணப்படுகிறது.


மதிப்பெண் குறைந்து போனால் எதிர்காலமே போய்விட்டது என்ற முடிவிற்கு இவர்கள் வர காரணங்கள் என்ன? விரும்பிய கல்லூரியிலே அல்லது பாடத்திலோ இடம் கிடைக்காவிட்டால் நாம் இவ்வுலகில் வாழ்வதற்கு தகுதியிழந்து விட்டோம் என்ற முடிவிற்கு ஏன் வருகிறார்கள்? இவர்களை மிகுந்த மனச்சுமைக்கு ஆளாக்கி, அஞ்சி நடுங்கி வெம்பிப்போகும் அளவிற்கு அமைந்து விட்ட கல்வி முறையினை எப்படி சீர் செய்வது? மாலை முழுதும் விளையாட்டு என்ற பாரதியின் கவிதை வரிகள் இனி எப்போதும் சாத்தியமே இல்லையா? நாம் கல்லூரியில் படித்த இளங்கலை பாடங்கள் இப்போது ஒன்பது பத்தாம் வகுப்புகளிலேயே புகுத்தும் அளவிற்கு அத்தனை அவசியம் நேர்ந்து விட்டதா?


* பள்ளிகள் / கல்லூரிகள் பின்பற்றும் முறைமைகளில் எவ்வெவற்றை நீக்கலாம் அல்லது சேர்க்கலாம்?

* கல்வி முறைகளில் எவ்வகையான சீர்முறைகளை மேற்கொள்ளலாம்?

இவற்றை இங்கு அறியத் தந்தீர்கள் என்றால், அவற்றை தொகுத்து விரைவில் சம்பந்தப்பட்ட கதவுகளை தட்டலாம் என்பது எண்ணம்.

இப்பதிவு உலகம் அறிவுநிறை பெரியோர்களால் நிறைந்து காணப்படுகிறது. கூடிச் சிந்திப்போம். எப்படியாவது தீர்வினை கண்டுபிடிப்போம். நிச்சயம் முடியும். குழந்தைகளை, குழந்தைகளாகவே -- சிறகடித்துப் பறக்கும் வானம்பாடிகளாகவே -- இருக்க நாம் அனுமதிக்க முடியும். உறுதியாக!!

பெற்றோர்களின் மனப்போக்கையும் இங்கு நோக்க வேண்டியுள்ளது. கல்விமுறை ஏற்கனவே குழந்தைகளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அவையத்து முந்தியிருக்கச் செய்வது நல்லது. ஆனால் ரொம்பவும் முந்தியிருக்கச் செய்கிறேன் என்ற பெயரில், பெற்றோர்கள் குழந்தைகளை நெம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு??

L.K.G. படிக்கும் என் தம்பி மகனுடன் மாடியில் உலவிக்கொண்டிருந்த போது, "பெலியப்பா (பெரியப்பா -- அவனுக்கு 'ரா' வராது, பச்சைக்குழந்தை அவன்) இந்த காக்கா ஸ்கூலுக்கு போலியா?" என கேட்டான்.

"இல்லப்பா அதுக்கெல்லாம் ஸ்கூல் கிடையாது" என்றேன்.

"இந்த புலா (புறா)?"

"ம்ஹூம்"

"அதோ அந்த காத்தாடி"

"ம்ஹூம்"

"அந்த மரம்?"

"ம்ஹூம்"

"இந்த ரோஜா?"

"ம்ஹூம்"

"லொம்ப ஜாலி தானே அதுங்களுக்கு"

மிகச் சாதாரணமாக என்னுள் அமிலத்தை கொட்டிவிட்டான் அவன்.

ஏசு கிறுத்து சிலுவையில் அறையப்பட்ட போது அவர் கண்கள் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்யமுடிகிறதா? முடியவில்லை எனில், இன்றைய மாணவனின் கண்களைப் பாருங்கள், தத்ரூபம்.

தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களைப் பற்றி படிக்கும் போது எனக்கு தோன்றுவது இது தான். நான் அவன் தலையை கறுப்பு துணியினால் போர்த்தி, தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றினில் வலிந்து நுழைக்கிறேன். பின் அவன் நின்றிருக்கும் மேடையை இடறி விடுகிறேன். அவன் துடிப்பு அடங்கும் வரையிலும் வேடிக்கை பார்க்கிறேன். உங்களுக்கு?????

17 comments:

Divya said...

\"திரைப்படங்களிலும், சீரியல்களிலும் தற்கொலைக் காட்சிகள் தத்ரூபமாக காண்பிக்கப்படுகின்றன. கயிறை எப்படி முடிச்சிடுகிறார்கள், எப்படி கழுத்தில் இட்டுக் கொள்கிறார்கள், எங்ஙனம் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொள்கிறார்கள் என்பது அணு அணுவாக காண்பிக்கப்படுகிறது.\"

எவ்வாறு தற்கொலை செய்து கொள்வது என்று தெளிவாக காண்பிப்பது கண்டிக்க தக்கதே!

ரொம்ப அருமையாக , தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.

தொடர்ந்து நல்ல பதிவுகளிட வாழ்த்துக்கள்!!!

சபாபதி சரவணன் said...

நன்றி திவ்யா.

இந்தக் கட்டுரையை எழுதி இரண்டு நாட்களாகின்றன. Beta Bloggerக்கு மாறியதால் பதிவினை தமிழ்மணத்தில் இட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு நாட்களில், மேலும் இரண்டு தற்கொலைகள் -- காரணம், அரையாண்டுத் தேர்வுகள் கடினமாக இருந்ததால். இவர்களுக்கு எப்போது விடிவு காலம் ?

பொன்ஸ்~~Poorna said...

:( பள்ளிகளிலேயே பிள்ளைகளுக்குக் கவுன்சலிங் தொடங்க வேண்டியது தான்.

பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர், ஊடகங்கள் என்று பல்முனைகளிலும் இதற்கான விடைகள் இருக்கின்றன.. விடைகளை எடுத்துக் கொடுக்கத் தான் ஆளில்லை :(

BadNewsIndia said...

ரொம்ப அருமையான் பதிவு சபாபதி சார்.

ஊடகங்கள் மாணவனுக்கு சாவது எப்படின்னு சொல்லித்தருகிறார்கள் என்பது மிகச்சரி.

ஏதோ ஒரு பழைய மகேந்திரன் படத்தில் யாரோ தூக்கு போட்டு சத்துட்டாங்கன்னு டயலாக் வரும். மகேந்திரன் பொறுப்பானவர். டயலாக் மட்டுமே வரும். தத்ரூபமா அத காட்டல (இப்ப வர மாதிரி).
சிறு வயதில் இதெல்லாம் கேட்டா, தூக்க்குச் சட்டியில் தலையை விட்டு எப்படிடா சாவாங்கன்னு தோணும்.

இப்ப அந்த கொழப்பம் எல்லாம் வெக்காம நாக்கு தள்ர வரைக்கும் காட்டறாங்க.

நல்ல விழிப்புணர்வு பதிவு.

என் சார்பிலும், ஒரு விளம்பரம் செய்து விடுகிறேன் :)

Hariharan # 03985177737685368452 said...

சபாபதி சரவணன்,

மெக்காலே கல்வி முறையின் முட்டாள்தனமான மிக ஆபத்தான சில தலைமுறைகளாகக் கல்வியின் தாக்கம் இது.

மார்க்குகள் எனும் வெறும் எண்கள் மிக அதீத முக்கியத்துவம் தரப்பட்டு குழப்பி, தன்னம்பிக்கை இழந்து தற்கொலை வரை இட்டுச்செல்கிறது.

சபாபதி சரவணன் said...

பொன்ஸ் வருகைக்கும் விளம்பரத்திற்கும், கருத்துக்கும் நன்றி.

//பள்ளிகளிலேயே பிள்ளைகளுக்குக் கவுன்சலிங் தொடங்க வேண்டியது தான். //

ஆனால் எனக்கென்னவோ கவுன்சலிங் தேவைப்படுவது, கல்வித்திட்டம் வகுப்பவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் என்று தோன்றுகிறது. ஏனெனில், குழந்தைகளை அவர்கள் இயல்பிலேயே அனுமதிக்க இவர்கள் மறுக்கிறார்கள்.

BNI வருகைக்கும் விளம்பரத்திற்கும் நன்றி.

நண்பர் Hariharan வாங்க.

//மெக்காலே கல்வி முறையின் முட்டாள்தனமான மிக ஆபத்தான சில தலைமுறைகளாகக் கல்வியின் தாக்கம் இது.

மார்க்குகள் எனும் வெறும் எண்கள் மிக அதீத முக்கியத்துவம் தரப்பட்டு குழப்பி, தன்னம்பிக்கை இழந்து தற்கொலை வரை இட்டுச்செல்கிறது. //

மெக்காலே கல்வி முறை என்பது பெரும் தோல்வி அடைந்து விட்ட பின்னரும், இன்னும் நாம் அதில் தொங்கிக்கொண்டு இருப்பது அதிர்ட்டக்கேடு. நன்கு சிந்தித்து சில மாற்றுகளை முன்மொழிந்தால் மகிழ்வேன். நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். நன்றி

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல பதிவு. கல்விய விளையாட்டாகவும் விடமுடியாது அதே சமயம் ரெம்ப கண்டிப்பானதாகவும் ஆக்க இயலாது.

ரெம்ப முக்கியமான ஒரு விஷயம். நம்மை எல்லாம் பாதிக்கிற ஒரு விஷயம் இருந்தாலும் இதைப்பத்தி நாமே அவ்வளவாக யோசிப்பதில்லை.

பள்ளியில் என்ன நடக்குது தன் மகனின்/மகளின் நிலை என்ன என்பதை உணர்ந்துவைத்திருக்கும் பெற்றோர் எத்தனைபேர்?

தன் பணி எவ்வளவு உயரியது என்பதை உணர்ந்துவைத்திருக்கும் ஆசிரியர்கள் எத்தனைபேர்?

சிந்தனையைத் தூண்டும் பதிவுக்கு நன்றி.

சபாபதி சரவணன் said...

நன்றி சிறில்.

//பள்ளியில் என்ன நடக்குது தன் மகனின்/மகளின் நிலை என்ன என்பதை உணர்ந்துவைத்திருக்கும் பெற்றோர் எத்தனைபேர்?

தன் பணி எவ்வளவு உயரியது என்பதை உணர்ந்துவைத்திருக்கும் ஆசிரியர்கள் எத்தனைபேர்? //

பிரச்சனையின் ஆணிவேர் இது தான்

அசுரன் said...

நல்ல சமூக அக்கறைப் பதிவு சபாபதி சரவணன்,

//சர்வ நிச்சயமாய் இவற்றுக்கு காரணம் ஊடகங்களே. கொஞ்சமும் சமூக உணர்வற்ற ஊடகங்கள் தான். முன்பெல்லாம் செய்தித்தாள்களில் சாவுச் செய்திகளின் புகைப்படங்கள் அரிதாக இருக்கும், அப்படியே இருந்தாலும் அவ்வளவு தெளிவாக இருக்காது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தற்போது 'டைட் க்ளோசப்'பில் படங்கள் எடுக்கப்பட்டு பெரிது பெரிதாகப் போடப்படுகின்றன. தண்டவாளத்தில் தலைகொடுத்து தலை வேறு, உடல் வேறான பிணத்தின் புகைப்படம் பிரசுரிக்கப்படுகிறது. தற்கொலைக்கு செய்தித்தாள்களிலும் தொலைகாட்சிகளிலும் அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றன. இறந்தவர்களைச் சுற்றி அவர் பெற்றோரும் உறவினரும் வருந்திக் கதறவது நெடுநேரம் காண்பிக்கப்படுகிறது. இதை பார்க்கும் குழந்தைகளும் அப்படியான ஒரு கரிசனத்திற்கு ஏங்கி இது போன்ற ஒரு முடிவிற்கு வருகிறார்கள். இது போன்ற தற்கொலைச் செய்திகளை ஊடகங்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும்.
///

ஊடகங்களின் பாத்திரத்தை நாம் மறுக்க முடியாது. ஆயினும் இவை இதற்க்கான ஊக்கிகளாகத்தான் உள்ளனவேயொழிய பொதுவாக இன்றைய ஏகாதிபத்திய பொருளாதார சூழல் ஏற்ப்படுத்தியுள்ள போட்டி, திறமை குறித்த கற்பிதங்களும் அதை முன்னிட்டு குழந்தைகளின் இயல்பான திறமைகளை காவு கொள்ளப்பட்டு ஒரே வார்ப்புருக்களைப் போல 99/100 மார்க் எடுக்கும் மூளை சரக்குகளையே நாம் உற்பத்தி செய்கிறோம் எனும் சமூக பொருளாதார அம்சமே பிரதானமாக விமர்சனம் செய்யப்பட வேண்டியது என்று நான் கருதுகிறேன்.

இந்த சமூக அளவுகோலுக்கு சமமாக தனது குழந்தைய வளர்ப்பதற்க்காக அந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் பிரஷர், அந்த பிரஷரின் மீது குழந்தை வெறுப்புறாமல் இருப்பதற்க்காக அதன் மனதில் நாம் நுழைக்கும் பல வண்ணக் கனவுகள் இவையெல்லாமதான் காரணம் என்றூ கருதுகிறேன்.

உங்களது கருத்து என்ன?

மேலும், இதில் விந்தையாக quality check-ல் தோல்வியுறும் பொருட்களை உற்பத்தியாளர் நிராகரிப்பது போய் அந்த பொருட்களே தாற்கொலை செய்து கொள்ளுகிறது என்கிற அம்சத்தில் மட்டுமே நமது குழந்தைகளுக்கும் சந்தைக்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்றூ கருதுகிறேன்.

என்னெ செய்ய எல்லா உறவுகளையும், இந்த உலகின் எல்லா பொருட்களையும், உயிர்களையும் சந்தைப் சரக்காக மாற்றுகிறது ஏகாதிபத்தியம்... குழந்தைகள் மட்டும் என்ன விதிவிலக்கா?

இதே விசயம்தான்(சமூக பொருளாதார அம்சம்) அமெரிக்க குழந்தைகளின் துப்பாக்கி வெடிப்பு சம்ப்வங்களுக்கும் காரணமாக உள்ளது,. அங்கும் ஊடகஙக்ள் ஒரு இணை ஊக்கியாகவே பாத்திரமாற்றுகின்றன. சமூக பொருளாதார அம்சமே முதன்மை பாத்திரம் வகிக்கிறது...

இது குறித்த உங்களாது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.

இங்கு பின்னூட்டமிட்டவர்க்ள் எல்லாம் அவர்களின் வீடுகளில் என்ன சரக்கு உற்பத்தி செய்கிறார்கள்?

இது கிண்டலடிக்க கேட்ட கேள்வி அல்ல. மாறாக இந்த சமூக உண்மையை அது உண்மை என்று நீங்கள் உணரும் பட்சத்தில் உங்கள் வீடுகளுக்கு பொருத்திப் பார்க்க கோருவதற்கே இந்தஹ் கேள்வி

அசுரன்

சபாபதி சரவணன் said...

// இன்றைய ஏகாதிபத்திய பொருளாதார சூழல் ஏற்ப்படுத்தியுள்ள போட்டி, திறமை குறித்த கற்பிதங்களும் அதை முன்னிட்டு குழந்தைகளின் இயல்பான திறமைகளை காவு கொள்ளப்பட்டு ஒரே வார்ப்புருக்களைப் போல 99/100 மார்க் எடுக்கும் மூளை சரக்குகளையே நாம் உற்பத்தி செய்கிறோம் //

// அந்த பிரஷரின் மீது குழந்தை வெறுப்புறாமல் இருப்பதற்க்காக அதன் மனதில் நாம் நுழைக்கும் பல வண்ணக் கனவுகள் இவையெல்லாமதான் காரணம் //

//இதில் விந்தையாக quality check-ல் தோல்வியுறும் பொருட்களை உற்பத்தியாளர் நிராகரிப்பது போய் அந்த பொருட்களே தற்கொலை செய்து கொள்ளுகிறது //

// சமூக பொருளாதார அம்சமே முதன்மை பாத்திரம் வகிக்கிறது... //

அசுரன் அவர்களே, கட்டுரையை அக்கரையுடனும் ஆழமாகவும் படித்து கருத்துச் சொன்னமைக்கு நன்றி.

'ரேக்ளா ரேஸ்' மாடுகளைப் போல பிள்ளைகளை சொடுக்கி, இரத்த விளாராக்கி பந்தயம் செய்யும் பெற்றோர்களை நான் பலமுறை கண்டிருக்கிறேன். கேட்டால், "பக்கத்து வீட்டு ரமேஷைப் பாருங்கள், அவன் 100க்கு ஒரு மதிப்பெண் குறைந்தாலும் கூட அவன் அப்பா அவனை நட்டநடு வீதியில் முட்டிப் போடச் செய்வார். இப்போது அவன் அமெரிக்காவில் இரண்டு லட்சம் சம்பளம் வாங்குகிறான். என் நண்பன் சுரேஷ் மகன் இப்போது இந்தியாவிலேயே 60,000 சம்பளம் வாங்குகிறான். இப்படி கண்டிப்பு காட்டி படிக்க வைத்தால் தான் பிற்காலத்தில் நல்லபடி வாழ்வான்" என்று சப்பைக் கட்டு கட்டும் பெற்றோர் அநேகம்.

வெறும் சந்தைப் பொருளாக குழந்தைகளை கருதும் மனப்போக்கு, குழந்தைகளின் creativite mindஐ நசுக்கி, Robotகளாக மாற்றி வருகின்றன. "மதிப்பெண் வாங்கு அல்லது செத்துமடி" என்று மறைமுகமாகக் கூட இல்லாமல் நேரடியாகவே குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிறது.

ஆனால் குழந்தைகளை குழந்தைகளாகவே வளர்க்க முடியும். கொண்ட கொள்கையாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தோழரை எனக்குத் தெரியும். மகனை ஆறுவயதில் பள்ளிக்கு அனுப்பினார். பாடம் சம்பந்தமாக அவனாக உதவி கோரினால் உதவுவார். பல வாத்தியங்களை இசைப்பதிலும், இலக்கிய படைப்பிலும் அவனாகவே மிளிர்கிறான். இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் நுழைந்திருக்கிறான். நான் கூட அவனை மற்றொரு "மனித நேயம் - செல்வனாக" வளர்கிறாய் தம்பி என்பேன்.

மற்றபடி நானும் எனது குழந்தைகளை என் தோழர் அவன் மகனை -- என் தந்தை என்னை வளர்த்த முறையிலேயே வளர்க்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். அது கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் . . . .

புரிந்திருக்கும் என நினைக்கிறேன் :-)

தருமி said...

பொறுப்பான நல்ல பதிவொன்றை தந்தமைக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.

ஏற்கெனவே சொல்லப்பட்டது போல் பெற்றோர்கள், பாடத்திட்டத் தயாரிப்பாளர்கள் இவர்களது பங்கு இங்கு மிக முக்கியமானவை.

சபாபதி சரவணன் said...

வந்தமைக்கும் கருத்து சொன்னதற்கும் நன்றி தருமி அவர்களே.

//ஏற்கெனவே சொல்லப்பட்டது போல் பெற்றோர்கள், பாடத்திட்டத் தயாரிப்பாளர்கள் இவர்களது பங்கு இங்கு மிக முக்கியமானவை.//

நீங்கள் பேராசிரியராக இருப்பதால், மாற்று கல்வித் திட்ட கருத்துகள் உங்களிடம் மிகுந்து இருக்கும். நேரம் கிடைக்கும் போது அவற்றை தொகுத்து அறியத்தந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். தனி மடலாக கூட அனுப்பலாம். wewakeananda@yahoo.com

Anonymous said...

Great work.

Since I'm in hectic schedule, I will narrate my suggestions soon.

Thanks for your effort.

Royan

சல்மான் said...

Grateful for your effort on bringing out a serious and social concern (especially among an environment who cares more about movie stars' market, marriages and injuries)

Evaluating a student for the whole year based on just 3 hours of written answers for questions and labeling them as 'passed' and 'failed' is ridiculus.

Education must be nurtured with daily life through natural and painless activities. A student must be evaluated based his ability/issues found during those activities all along. Any issues shall be conveyed as scope for improvement and focus. Any strengths must be conveyed as medium for growth.

An understanding and 'available' parents, natural teachers and painless evaluation systems that help find real issues are needed, not the current system

Thanks very much for this article.

salmaan

சபாபதி சரவணன் said...

//Education must be nurtured with daily life through natural and painless activities. A student must be evaluated based his ability/issues found during those activities all along. Any issues shall be conveyed as scope for improvement and focus. Any strengths must be conveyed as medium for growth.//

Thank you very much Salman for sharing your views.

அசுரன் said...

///
மற்றபடி நானும் எனது குழந்தைகளை என் தோழர் அவன் மகனை -- என் தந்தை என்னை வளர்த்த முறையிலேயே வளர்க்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். அது கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் . . . .

புரிந்திருக்கும் என நினைக்கிறேன் :-)
////


எனோ இந்த வரிகளை கேட்க்குமிடத்து மனது பாரமாகிறது.... :-(

கனவுகளின் சாக்கூடமாக, கல்லறையாக இந்த சமூகம் மாறிக் கொண்டிருக்கும் வெளையில்தான்... கனவுகளை தொலைத்து வெற்று கூடுகளாகவும், வெறுமையான உள்ளத்துடனும் கண்களில் ஒளி குன்றீ கருமை மிகுந்தும்.... கனவுக்ளை தொலைத்த துன்பம் தாளாமல் தற்கொலை செய்து கூடற்ற ஆன்மாக்களாகவும் இந்திய உழைக்கும் வர்க்கம் வலம் வரும் வேளையில்தான்....

கலாம் என்ற அற்புத மனிதர் பின்னால் சூரியனின் சுடரொளி மின்ன காலை வானில் உதிக்கிறார்.....

கனவு காண்..... கனவு காண் என்று நம் காதில் பூ சுற்றுகிறார்....

உங்களைப் போலவே எனக்கும் ஒரு சிறுவன் இருக்கிறான்.... எனது குழந்தை அல்ல.. ஆயினும் அவனைத்தான் எனது குழந்தையாக கருதி வருகிறேன்....

உங்களைப் போலவே அவனை வளர்ப்பதில் எனக்கும் சிரமங்கள்..... ஆயினும் வெற்றி பெற்றே வருகிறேன்....

குறிப்பாக மார்கஸ் பிறந்தார் புத்தகம் அந்த சிறுவனை வளர்ப்பதில் எனக்கு பேருதவி செய்கிறது...

மார்க்ஸின் தந்தை தனது மகனை எப்படி வளர்க்கீறார்.. என்ன கற்றுக் கொடுக்கிறார்... என்பதை படிக்கும் போது நமக்கும் சில புரிதல் கிட்டுகிறது...

அசுரன்

சபாபதி சரவணன் said...

//குறிப்பாக மார்கஸ் பிறந்தார் புத்தகம் அந்த சிறுவனை வளர்ப்பதில் எனக்கு பேருதவி செய்கிறது...//

நன்றி அசுரன். இந்த புத்தகத்தை தான் எனக்கும் என் தோழர் பரிசளித்தார்