Monday, October 16, 2006

ஞாபகம் வந்தது

பிரசவ வேதனையில்
கையால் மெத்தைகிழித்து
மனைவி அலறித்
துடித்த போதும் . . .

பஞ்சுப் பொதியினுள்
பட்டு ரோஜாவாய்
என் மகனை
செவிலிப் பெண்
என்னிடம் காட்டியபோதும் . . .

அப்பா என முதன்முதலில்
அவன் குழல் தோற்கும்
பிஞ்சு மொழியில்
எனை அழைத்த போதும் . . .

பள்ளியில் மகனை
முதல் நாள் அமர வைத்து
இனம்புரியா உணர்ச்சியுடன்
கண்ணோரம் துளிர்த்தநீருடன்
விடைபெற்ற போதும் . . .

காய்ச்சலில் அவதிப்பட்ட
பத்துவயது மகளை
இடுப்பில் சுமந்து கொண்டு
பக்கத்து தெரு மருத்துவரிடம்
மனைவி ஓடியபோதும் . . .

ஊரெல்லாம் தீபாவளி
கலைகட்டியிருக்க இரவுமுழுதும்
அலைந்து எப்படியோ
திரட்டிய பணத்தில்
பட்டாசு புதுத்துணியுடன்
குழந்தைகள் முன்நின்று
அவர்கள் ஓடிவந்து எனது
கால்களை கட்டிக்கொண்டபோதும் . . .

ஸ்கூட்டர் பழகுகிறேன்
என்று கீழே விழுந்து
உடம்பெல்லாம் அடிபட்ட
பதினெட்டு வயது மகனை
அவன் கூச்சப்படப்பட
குளிப்பாட்டி, சோறூட்டி
மனைவி கவனித்தபோதும் . . .

நல்ல வேலை, கைநிறைய
சம்பளம் என்று
அயல்நாட்டில் கிடைத்த
வேலைக்கு கிளம்பிய
மகனை விமானநிலையத்தில்
கட்டியணைத்து உச்சிமுகர்ந்தபோதும் . . .

திருமணம் முடித்து மகளை
புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி
அடுத்தடுத்த நாட்களில்
என் மடிமீது மனைவியும்
அவள் மடிமீது நானும்
முகம் புதைத்து விம்மி
கதறியபோதும் . . .

தகவல் சொல்லாமல்
திடீரென வந்துவிட்ட
பக்கவாதத்தால் தாக்கப்பட்டு
படுக்கையில் நான்
முடங்கிப்போக -- சோறுடனும்
பாலுடனும், நம்பிக்கையையும்
எனக்கு ஊட்டி மனைவி
எனைத் தழுவிக் கொண்டபோதும் . . .

சத்திய தரிசனமாய்
நான் உணர்ந்து கொண்டேன்
என் பெற்றோரின் அன்பை.

1 comment:

BadNewsIndia said...

ரொம்ப நல்லா இருந்தது சபாபதி.

simple ஆக இருந்தாலும், ஒரு ஈர்ப்புடன் இருந்தது.
மனதில் உள்ள ஈரம், இந்த மாதிரி நல்ல விஷயங்கள் படிக்கும் போதுதான் நமக்கே தெரிகிறது.

தொடரட்டும்! தொடரட்டும்!