Thursday, October 19, 2006

இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது


இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது.

நான் சொல்ல வருவது, திங்கள் அன்று சென்னை அண்ணா நகர் குட்டையில் விழுந்து D.A.V. பள்ளியைச் சேர்ந்த குழந்தை மரணமடைந்த பெருந்துயர சம்பவத்தைதான்.

கோபாலபுரத்தில் அமைந்த D.A.V. பள்ளியில் சேர்க்கை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. முதல் நாள் இரவே நெடிய வரிசையில் நின்று
விண்ணப்பம் வாங்கி, சிபாரிசு செய்ய உயர்ந்த மனிதர்களை பிடித்து, சில பத்தாயிரங்களை கொட்டிக் கொடுத்து அழுத பின்னர் மட்டுமே ஒரு குழந்தை அந்த பள்ளியில் கால் வைக்க முடியும்.

நினைத்து பாருங்கள், அதன் பெற்றோர் எத்தனை வண்ணக் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பர்.

திங்கட்கிழமை (16/10/2006) இந்த பள்ளியில் இருந்து இன்பச்(!!!) சுற்றுலாவிற்கு அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா சென்றுள்ளனர். 140 குழந்தைகளுடன் நெடிதுயர்ந்த டவருக்கு சென்றதே முதல் குற்றம். நான்கு ஆசிரியைகளும், ஒரு ஆயாவும், இந்த 140 குழந்தைகளை பூங்காவிற்கு
நடத்திச்சென்றுள்ளனர். விதிமுறைகளின் படி சுற்றுலா செல்லும்போது 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் கண்காணிப்பிற்கு.
ஆனால் நாம் தான் விதிமுறைகளை -- முக்கியமாக குழந்தைகள் விஷயத்தில் -- காற்றில் பறக்க விடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றோமே! யாரோ பெற்ற குழந்தைகள் தாமே!!

இந்த பூங்காவினுள் இரண்டு தாமரைக்குட்டைகள் இருக்கும். இந்த குட்டைகள் முழு கொள்ளளவிற்கு (பெரியவர்களின் இடுப்பு வரை) பச்சைப் பசேல் என்ற பாசியுடன் நிரம்பி இருக்கின்றன. பெரியவர்களால் மட்டுமே, அதுவும் கூட பலமுறை இந்தப் பூங்காவிற்கு வந்தவர்களால் மட்டுமே, இந்த
குட்டையின் தண்ணீருக்கும், அதன் பக்கத்து புல் தரைக்கும் வித்தியாசம் காண முடியும். இப்படி இருக்க பூங்காவிற்கு அழைத்து சென்ற
ஆசிரியர்கள் குறைந்தபட்சம் இந்த குட்டை இருக்கும் பகுதியையாவது தவிர்த்திருக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கும்
இங்கு கண்டிக்கப்படவேண்டும். இந்த குட்டைக்கு முறையான தடுப்பு அமைக்கப்படவில்லை. இந்தப் பூங்காவின் சீரமைப்பு பணியினை மேற்கொண்டு வந்ததாகக் கூறும் மாநகராட்சியினர், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததாக சால்ஜாப்பு கூறுகின்றனர்.


நந்தினி என்ற அந்த நான்கு வயது குழந்தை மூழ்கி இறந்தது நெடுநேரம் வரையில் ஆசிரியைகளல் அறியப்படவேயில்லை. வண்டியில் ஏறிய பின்னர்
ரோல் கால் செய்யும் போது குழந்தை காணாமல் போனது அறியப்பட்டு, பூங்கா முழுக்கத் தேடி கடைசியில் குட்டையில் பிணமாகக் கண்டெடுத்து
இருக்கின்றனர்.
கும்பகோணம் சம்பவத்தில் சற்றேறக்குறைய ஒரு நூறு குழந்தைகளை தீயிலிட்டு கொன்ற பள்ளி நிர்வாகம், ஆண்டுகள் இரண்டாகியும், பெரிதான
தண்டனை ஏதும் அடையவில்லை. ஓலைக்குடிசையில் வகுப்பு அமைக்க ஒப்புதல் கொடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு என்ன தண்டனை --
வருடந்தோறும் தணிக்கையின் போது அந்தப் பள்ளியின் வசதிக்குறையை மூடி மறைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? கையூட்டு
பெற்றுத்தானே இந்த பாதகத்தை செய்திருப்பார்கள்? அந்த அதிகாரிகளின் வீட்டில் பொங்கும் ஒவ்வொரு சோற்று பருக்கையும் குழந்தைகளின்
சதைப் பொசுங்கும் நாற்றத்துடன் தானே திகழ்ந்து கொண்டிருக்கும் ?
இந்தக் கொடுஞ்சம்பவத்திற்குப் பின்னரும் எத்தனை குழந்தைகளை பள்ளி நிர்வாகங்களின் அலட்சிய போக்கிற்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சென்னையில் புகழ்பெற்ற பெயின் (CSI Bain) பள்ளியில் நர்சரி வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தை, seesaw என்னும் விளையாட்டில் இருந்த போது, கம்பி குத்தி அவ்விடத்திலேயே மரணம் அடைந்தான். இதில் விளையாடும் குழந்தைகள் பிடித்துக்கொள்வதற்கு தோதாக வடிவில் கம்பி இருக்கும். ஆனால் அந்த பள்ளியில் கம்பியில் பகுதி உடைந்து போய் பல நாளாகி இருக்கிறது. வெறும் பகுதி மட்டுமே இருந்துள்ளது. மேலே சென்ற இருக்கை தாழ்ந்து தரையை மோதும் போது இந்த கம்பி அந்த குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தது. எத்தனை பெரிய கொடுமை! இவ்வளவிற்கு பின்னரும் அந்தப் பள்ளி, பொறுப்பை தட்டி கழித்து, மாணவனின் அராஜகத்தினால் மரணம் நிகழ்ந்தது என்று கூசாமல் சொல்லியது. குழந்தையிடம் ஜாக்கிரதையை எதிர்பார்க்கிறார்கள் இந்த கயவர்கள்.

பல சம்பவங்கள். எத்தனை வேன் விபத்துக்கள் நடந்து விட்டன! ஒரு சிறிய வேனில் ஆட்டு மந்தையென பிள்ளைகளை அடைத்து காசு பார்க்கும்
பள்ளிகள். அந்த வேன்கள் கூட சரியான பராமரிப்பின்றியும் கவனக்குறைவாலும், கடந்த சில மாதங்களில் நிறைய விபத்துகளை சந்தித்தன. அந்த வேன் விபத்துகளின் பிறகு சிறிது நாட்கள் சில உத்தரவுகளை போட்டது அரசு! அவ்வளவே தான். இப்போது வழக்கம் போல் பள்ளிகள் விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு ஆட்டோக்கள். ஒரு ஆட்டோவில் 15 குழந்தைகளைக் கூட அழைத்துப்போகிறார்கள். நெஞ்சு பதைக்கிறது இந்த காட்சிகளை பார்க்கும் போது. உண்மையை சொல்லப்போனால் ஒரு குருட்டதிர்ஷ்டத்தில் தான் வீடு வந்து சேர்கின்றன ஒவ்வொரு குழந்தையும். போருக்கு செல்லும் ராணுவத்தினர் கூட பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விடுவார்கள் போலும்; நம் குழந்தைகள் பள்ளி சென்று வீடு திரும்புவது என்பது நிச்சியமில்லை.

ஒவ்வொரு பள்ளியும் கல்விக் கட்டணம் என கணிசமான ஒரு தொகையை வசூலிக்கிறார்களே. அதனுடன் சேர்த்து ஒரு நியாயமான போக்குவரத்து
கட்டணத்தை வசூலித்து, போதிய வேன், பஸ்களை ஏற்பாடு செய்து கொடுத்தால், பெற்றோர்கள் ஏன் ஆட்டோவை நம்பி இருக்கப்போகிறார்கள்?
பெரும்பாலான பள்ளிகளில் போக்குவரத்து கட்டணம் என்று வசூலிப்பது மிகப்பெரியத் தொகை. எரிபொருள் செலவு, ஓட்டுனர் சம்பளம்,
வண்டிகளின் தேய்மானம் என்று எப்படி கணக்கு பார்த்தாலும், ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு 100 ரூபாய்க்கு மேல் ஆகவே ஆகாது. ஆனால் பல
பள்ளிகளில் கட்டணம் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை செல்கிறது. ஏதாவது ஒரு ரூபத்தில் காசு பிடுங்க வேண்டும் என்ற வெறி.

மிகச் சாதரணமானவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் பேருந்தை நம்பியே இருக்கின்றனர். இந்த மாணவர்கள் ஏறும் வரை கூட பொறுமையாக
இருக்க முடியாமல் விசில் ஊதும் நடத்துனர்கள் அநேகம். சில நாட்களுக்கு முன்னர் பேருந்தில் நான் பயணம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு
நிறுத்தத்தில் நிறைய பள்ளி மாணவர்கள் ஏறினர். அவ்வளவு பேரும் சுமார் ஏழு முதல் பத்து வயதிற்கு உட்பட்ட சுட்டிக் குழந்தைகள். பெரும்
சப்தத்துடன் தங்களுக்குள் பேசிக்கொண்டும், சிறு சண்டைகள் இட்டுக் கொண்டும், கவலையின்றி வந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் தானே! இது
அவர்கள் இயல்பு தானே! சில குழந்தைகள் தங்கள் விளையாட்டினால் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டிருந்த பயணிகள் மீது சாய்ந்து கொண்டும்,
இடித்துக் கொண்டும் வந்தனர். வந்தார் நடத்துனர், இரண்டு மூன்று குழந்தைகளின் கன்னங்களில் பளார் என்று அரைந்தார். சில பயணிகள்
அவருக்கு துணையாக, "ஆமாம் சார், அப்படித்தான், கொடுங்கள் நன்றாக, அப்போது தான் இந்த எமன்கள் அடங்கும்" என்று சொன்னார்கள். யார்
எமன்கள்? இந்த நியாயவான்கள் தங்கள் பிள்ளைப்பருவத்தில் தத்தமது வாலினை சுருட்டி குண்டியில் அடக்கிக் கொண்டார்களா என்ன ?

மிகக் கடுமையான சட்டம் கொண்டுவருவது மட்டும் என நிறுத்திக் கொள்ளாமல் அதை முழுவதுமாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு குழு அமைத்து, பாரபட்சம், தயவு தாட்சண்யம் இல்லாமல் அரசு செயல்பட்டால் ஒரு வேளை இந்த வன்முறை ஒழிக்கப்படக்கூடும். எந்த சட்டம் கொண்டுவந்தாலும் பொசுக்கென்று நீதிமன்றங்களுக்கு சென்று தடைவாங்கி விட முடிவது மற்றொரு அவலம்.

26 comments:

Anonymous said...

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.. சும்மா சொல்ல கூடாது. அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்பில் செலுத்தும் கவனத்தில் கால் பங்காவது நம் இந்திய குழந்தைகளிடம் காட்டலாம்...

இனிமே.. யாரையும் நம்ப கூடாது.. முடிந்தவரை நம்ம குழந்தையை நாமதான் பாத்துக்கனும்...

இலவசக்கொத்தனார் said...

//மிகக் கடுமையான சட்டம் கொண்டுவருவது மட்டும் என நிறுத்திக் கொள்ளாமல் அதை முழுவதுமாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு குழு அமைத்து, பாரபட்சம், தயவு தாட்சண்யம் இல்லாமல் அரசு செயல்பட்டால் ஒரு வேளை இந்த வன்முறை ஒழிக்கப்படக்கூடும்.//

சரியாகச் சொன்னீர்கள். குழந்தைகளை இழந்த அக்குடும்பங்களுக்கு நமது அனுதாபங்கள்.

நிர்மல் said...

வருத்தம் தரக்கூடிய நிகழ்வு.

சமூக அக்கறை உள்ள பதிவு.

தொடருங்கள்

மாதங்கி said...

ரொம்ப வருத்தமாக இருக்கிறது. வேன்களைப் பற்றிப் படித்தபோது இன்னொரு சம்பவம் சபாபதி சரவணன். வேனில் எல்லா குழந்தைகளையும் ட் ராப் செய்த ட் ரைவர், கடைசி சீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை பார்க்காது விட்டுவிட்டு வேன் சன்னல்களை மூடி அதன் இடத்தில் பார்க் செய்து விட்டு போய்விட்டார். வீட்டில் தேடி, பள்ளியில் விசாரித்து கண்டுபிடிப்பதற்குள் டூ லேட். ஒவ்வொரு வேனிலும், ஸ்கூல் பஸ்ஸிலும் ஸ்கூல் வேனிலும் ஒரு ஆண்ட்டி இருக்கவேண்டும், சீட் பெல்ட் இருக்கவேண்டும். எங்கெங்கோ வேண்டாத செலவுகள், இதெல்லாம் கனவாகவேதான் இருக்கின்றன. தேர்தல் வேலைகளுக்கு பின் பாதுகாப்புச் சுவர்- இதைப் போல ஒரு முட்டாள்தனம்,...

பொன்ஸ்~~Poorna said...

ரொம்பக் கொடுமையா இருக்கு கேட்க.. DAV போன்ற எல்லாருக்கும் தெரிந்த பள்ளிகளிலேயே இப்படி என்றால், மற்ற தனியார் பள்ளிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! அரசாங்கம் தலையிட்டாகவேண்டும், அல்லது குறைந்த பட்சம் ஏதேனும் மனித உரிமை அமைப்பாவது தலையிட்டு பள்ளி நிர்வாகத்தைக் கேள்வி கேட்கவேண்டும். இல்லையென்றால் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்!

சபாபதி சரவணன் said...

அனானி

//மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்.. சும்மா சொல்ல கூடாது. அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்பில் செலுத்தும் கவனத்தில் கால் பங்காவது நம் இந்திய குழந்தைகளிடம் காட்டலாம்...//

நீங்கள் சொல்வது உண்மை. மேலைநாடுகளில் செலுத்தப்படும் கவனத்தில் கிஞ்சிற்றும் நம்மிடம் இல்லை. இன்னும் எத்தனை பலிக்கு பின்னர் நாம் விழித்துக் கொள்ளப்போகிறோம் என்பது தான் நம்முன் தொக்கி இருக்கும் கேள்வி.


வருகை தந்து அனுதாபங்களை தெரிவித்துக்கொண்ட இலவசகொத்தனாருக்கு நன்றி

வருகைக்கு மிக்க நன்றி நிர்மல்

மாதங்கி,

வருகைக்கு நன்றி.

ரிக்ஷாவிலும், ஆட்டோவிலும், வேனிலும் பிஞ்சுக் குழந்தைகள் தூங்கிக் கொண்டு செல்வதை பல முறை கண்டிருக்கிறேன். மூன்று வயதில் -- பல இடங்களில் 2 வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது கூட ஒரு அப்பட்டமான வன்முறை என்பது என் கருத்து

துளசி கோபால் said...

அய்யோ... என்ன கொடுமைங்க இது.

இப்படியா கவனமில்லாம இருப்பாங்க?

அடப் பாவமெ.

சபாபதி சரவணன் said...

வாருங்கள் பொன்ஸ்,

//அரசாங்கம் தலையிட்டாகவேண்டும், அல்லது குறைந்த பட்சம் ஏதேனும் மனித உரிமை அமைப்பாவது தலையிட்டு பள்ளி நிர்வாகத்தைக் கேள்வி கேட்கவேண்டும். இல்லையென்றால் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்! //

அதே தான். எப்பாடுபட்டாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

துளசி கோபால், வருகைக்கு நன்றி சகோதரி

நன்மனம் said...

வருந்தத்தக்க நிகழ்வுகள்.

உயிர்களுக்கு மதிப்பு கொடுக்கும் தன்மை அடுத்த தலைமுறைக்காவது கற்று கொடுக்க வேண்டும்.

செல்வநாயகி said...

உங்கள் பதிவுகளில் வெளிப்படும் சமூக அக்கறை உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்கச் சொல்கிறது. நல்ல முயற்சி சபாபதி. குழந்தைகள் குழந்தைகளாக நடத்தப்படாத சமூகத்தை எதிர்த்து ஏதேனும் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் நமக்கெல்லாம் இருக்கிறது. நன்றி.

சபாபதி சரவணன் said...

//உயிர்களுக்கு மதிப்பு கொடுக்கும் தன்மை அடுத்த தலைமுறைக்காவது கற்று கொடுக்க வேண்டும்.//

//குழந்தைகள் குழந்தைகளாக நடத்தப்படாத சமூகத்தை எதிர்த்து ஏதேனும் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் நமக்கெல்லாம் இருக்கிறது.//

வருகை தந்து, உணர்வுகளை பகிர்ந்து கொண்ட நன்மனம், செல்வநாயகி ஆகியோருக்கு நன்றி

Chandravathanaa said...

இங்கு ஜேர்மனியில் இப்படியான விடயங்களில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.
குழந்தைகள் மீதான இந்திய அரசின் அக்கறை மிகவும் குறைவாகவே இருக்கிறது.
ஆசிரியர்கள், அந்த இடத்துப் பெரியவர்கள் என்று யாருமே இவற்றில் அக்கறை கொள்வதில்லையா?
மிகவும் வருத்தமான விடயம்.

நீங்குள் குறிப்பிட்ட ஒவ்வொரு சம்பவமும் குறிப்பிட்டவர்களில் அஜாக்கிரதையான செயற்பாடுகளினாலேயே நடந்துள்ளன.

சபாபதி சரவணன் said...

நன்றி சந்திரவதனா

//ஆசிரியர்கள், அந்த இடத்துப் பெரியவர்கள் என்று யாருமே இவற்றில் அக்கறை கொள்வதில்லையா?
மிகவும் வருத்தமான விடயம்.//

ஆம் இந்த அக்கறையின்மை மிகவும் வெட்கப்படக்கூடிய ஒன்று

சபாபதி சரவணன் said...

வருகை தந்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கு

உயிர் பறிபோன பிறகுதான் அதற்குண்டான தீர்வுகளில் அரசாங்கம் ஈடுபடுது..இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று..

இப்பொழுது ஆட்டோவில் அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்லுகின்றனர்... பெரிய விபத்துக்கள் நடந்தாலன்றி இந்த விசயத்தை அரசாங்கம் கவனிக்காதோ..?

நெல்லை சிவா said...

படிக்கும் போதே மனம் வேதனைப்பட்டது.

பெயர் பெற்ற கல்வி நிறுவனங்கள் கூட இப்படி கவனக்குறைவாக இருந்தால் என்ன செய்வது?

உயிர் இழப்பின் விலை மதிப்பிடமுடியாதது. இதை அரசும், அரசு அதிகாரிகளும் உணரவேண்டும்.

சமூகப் பொறுப்பு என்பது எல்லா தனிமனிதனுக்கும் வரவேண்டும்.

நீங்கள் வெளிச்சம் காட்டியது நன்று. தொடருங்கள் உங்கள் பணியினை.

இந்த ப்ளாக்குகளில் பதிப்பிக்கப்படும் செய்திகள், பத்திரிக்கையுலக நண்பர்கள், மற்றும் அரசியல் சார்ந்தவர்களும் படிக்கும் ஒன்றாக இருக்கலாம். அவர்கள், இது போன்ற நிகழ்வுகளை, சீராக்க உதவினால், நன்றாயிருக்கும்.

துள்ளி வரும் வேல், மேலும் நல் காப்புப் பணியினைச் செய்ய வாழ்த்துக்கள்.

BadNewsIndia said...

சபாபதி, மனதிர்க்குள் ஈட்டி பாய்ந்ததை போல் இருந்தது DAV பாலகனின் மரணம்.
எத்தனை வலி இருந்திருக்கும் அந்தக் குழந்தைக்கும் அவனை இழந்த பெற்றோருக்கும்.

மெத்தனம்! மெத்தனம்! மெத்தனம்!

மெத்தன வாழ்க்கை வாழும் அதிகாரிகள் தானே இதர்க்கெல்லாம் காரணம்.

இதை படித்துவிட்டு உச் கொட்டி அடுத்த வேலை பார்க்காமல், நம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
அடுத்த பதிவுகளில், அந்த பள்ளியின் முகவரி, தொலைபேசி எண், ஈ.மெயில் இதை எல்லாம் பதியுங்கள்.
நம்மால் முடிந்த எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

let us make some noise and create solution and not just sit here and lament!

Keep up the good work Mr. Sabapathy!

வெங்கட்ராமன் said...

/**********************************
ஆனால் நாம் தான் விதிமுறைகளை -- முக்கியமாக குழந்தைகள் விஷயத்தில் -- காற்றில் பறக்க விடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றோமே! யாரோ பெற்ற குழந்தைகள் தாமே!!
**********************************/

கும்பகோனம் விஷயத்திற்கு பிறகும், சில கல்வி அதிகாரி நாய்களுக்கும் கல்வி நிறுவன பேய்களுக்கும் புத்தி வரவெயில்லை. . .

(நிஜ, நாய்களும், பேய்களும் என்னை மன்னிக்கவும்).

Anonymous said...

எனது மகள் படிக்கும் பள்ளியில் முன்பே என்ன ஆனாலும் அதற்க்கு பெற்றவர்களே பொறுப்பு என்று எழுதிக் கொடுக்க சொல்லிவிடுகிறார்கள்.
எத்தனை பொறுப்பற்ற தன்மை.தில்லி பப்ளிக் போன்ற பெயர் பெற்றவைகளும் இப்படியே.

சபாபதி சரவணன் said...

//பெயர் பெற்ற கல்வி நிறுவனங்கள் கூட இப்படி கவனக்குறைவாக இருந்தால் என்ன செய்வது?

உயிர் இழப்பின் விலை மதிப்பிடமுடியாதது. இதை அரசும், அரசு அதிகாரிகளும் உணரவேண்டும்.

சமூகப் பொறுப்பு என்பது எல்லா தனிமனிதனுக்கும் வரவேண்டும். //

நன்றி நெல்லை சிவா. குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் பொறுப்பு நிச்சயம் வேண்டும்.

//இதை படித்துவிட்டு உச் கொட்டி அடுத்த வேலை பார்க்காமல், நம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
அடுத்த பதிவுகளில், அந்த பள்ளியின் முகவரி, தொலைபேசி எண், ஈ.மெயில் இதை எல்லாம் பதியுங்கள்.
நம்மால் முடிந்த எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.//

நன்றி badnews india. பள்ளியின் முகவரி: DAV Matriculation Higher Secondary School, 25 Lloyds Road Gopalapuram, Chennai 600086 ; Phone: 28351988

//கும்பகோனம் விஷயத்திற்கு பிறகும், சில கல்வி அதிகாரி நாய்களுக்கும் கல்வி நிறுவன பேய்களுக்கும் புத்தி வரவெயில்லை. . .//

சரியாகச் சொன்னீர்கள் வெங்கட்ராமன். கும்பகோனம் போன்ற மிகப்பெரிய இழப்பிற்கு பின்னரும் இதைப்போன்ற சம்பவங்கள் தொடருவது பெரிய அவமானம்.

//எனது மகள் படிக்கும் பள்ளியில் முன்பே என்ன ஆனாலும் அதற்க்கு பெற்றவர்களே பொறுப்பு என்று எழுதிக் கொடுக்க சொல்லிவிடுகிறார்கள்.
எத்தனை பொறுப்பற்ற தன்மை.தில்லி பப்ளிக் போன்ற பெயர் பெற்றவைகளும் இப்படியே.//

நன்றி மாதினி. யாரை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறோம் ? இவர்களை நம்பித்தானே! என்ன நடந்தாலும் இவர்கள் தானே பொறுப்பு. நியாயப்படி பார்த்தால் இவர்கள் தானே எழுதித்தர வேண்டும்? இப்படி எழுதிவாங்குவதே குற்றம் எனக் கொள்ள வேண்டும்

அசுரன் said...

//கும்பகோணம் சம்பவத்தில் சற்றேறக்குறைய ஒரு நூறு குழந்தைகளை தீயிலிட்டு கொன்ற பள்ளி நிர்வாகம், ஆண்டுகள் இரண்டாகியும், பெரிதான
தண்டனை ஏதும் அடையவில்லை. ஓலைக்குடிசையில் வகுப்பு அமைக்க ஒப்புதல் கொடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு என்ன தண்டனை --
வருடந்தோறும் தணிக்கையின் போது அந்தப் பள்ளியின் வசதிக்குறையை மூடி மறைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? கையூட்டு
பெற்றுத்தானே இந்த பாதகத்தை செய்திருப்பார்கள்? அந்த அதிகாரிகளின் வீட்டில் பொங்கும் ஒவ்வொரு சோற்று பருக்கையும் குழந்தைகளின்
சதைப் பொசுங்கும் நாற்றத்துடன் தானே திகழ்ந்து கொண்டிருக்கும் ?
இந்தக் கொடுஞ்சம்பவத்திற்குப் பின்னரும் எத்தனை குழந்தைகளை பள்ளி நிர்வாகங்களின் அலட்சிய போக்கிற்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். //


இது போன்ற சமப்வங்களில் கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர் ஒட்டி, இயற்கையை பலித்தால் போதும் தமது சமூக உணர்வின் உச்சக்கட்ட வெளிப்பாடு அவ்வளவுதான் என்று நமது மக்கள் படுபாதாள மந்தை உணர்வில் ஆழ்ந்துள்ள போது தனியொருவர்கள் என்ன செய்து விடமுடியும்.

இது சமூகத்தின் பிரச்சனை. மக்கள் விழிப்புற வேண்டும். தமது இடத்தின் பிரச்சனைகளுக்கு தாம்தான் பொறுப்பு என்ற அதிகாரத்தை கையிலெடுத்து இந்த சம்பிரதாய அராஜக அரசின் அதிகாரிகளை உண்டு இல்லை என்று நொக்கியெடுத்தால் இது போன்ற பிரச்சனைகள் நடக்காது. இதற்க்கு இந்த பிரச்சனையின் அரசியலை மக்களிடம் விரிவாக பேசி பிரச்சாரம் செய்து அணி திரட்டி அவர்களே போராடி பெறச் செய்ய வேண்டும்.

அசுரன்

சபாபதி சரவணன் said...

//இது சமூகத்தின் பிரச்சனை. மக்கள் விழிப்புற வேண்டும். தமது இடத்தின் பிரச்சனைகளுக்கு தாம்தான் பொறுப்பு என்ற அதிகாரத்தை கையிலெடுத்து இந்த சம்பிரதாய அராஜக அரசின் அதிகாரிகளை உண்டு இல்லை என்று நொக்கியெடுத்தால் இது போன்ற பிரச்சனைகள் நடக்காது.//

நன்றி அசுரன். நல்லதொரு தீர்வினை முன்வைத்ததற்கு.

Radha N said...

மனசுக்கு கஷ்டமாயிருக்குங்க.....

போக்குவரத்துக் காவல் சோதனை அதிகாரிகள் (சார்ஜண்ட்), அங்காங்கே நின்று வசூல் மட்டும் செய்வதோடு நின்றுவிடாமல் கீழ்காணும் வேலைகளையும் செய்யுமாறு கட்டாயமாக்கப்படல் வேண்டும்.

மாதத்திற்கு இரண்டு முறை, தங்களது காவல் எல்லைகளுக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாகனங்களில் (முக்கியமாக பள்ளி வேன்கள்), அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் குழந்தைகள் கொண்டுச்செல்லப்படுகிறார்களா என்று சோதனைசெய்து பள்ளிக்கு ஒரு காப்பியும், தங்களது மேலதிகாரிக்கு ஒரு காப்பியும் அனுப்படல் வேண்டும். இந்த சோதனையினை வாகனம் காலையில் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்து சேர்க்கும் தருவாயில் செய்யப்பட வேண்டும். இந்த சோதனையின் பள்ளி நகலினை ஒரு பிரதி எடுத்து, பள்ளியின் பொதுநோட்டிஸ் போர்டில் ஒட்டப்படல் வேண்டும். மேலும், இந்த நோட்டிஸ் காப்பி இணைக்கப்படாத வாகனத்துக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகம் எப்.சி. கிளியரஸ் கொடுக்கப்படக்கூடாது. இவ்வாறு மாதாந்திர சோதனை செய்யாத போக்குவரத்துகாவல் அதிகாரிக்கு, சில அலவன்சுகள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் இது தொடர்ந்தால், சம்பள உயர்வு ரத்து செய்யப்பபடல் வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், சீட்டில் உட்கார்ந்து குளிர்சாதன அறையில் மட்டும் பணியாற்றாமல், பள்ளிகளுக்கு நேரடி சோதனைக்கு செல்லவேண்டும். இதில் எள்ளவும் கையூட்டு புகுந்து விடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சபாபதி சரவணன் said...

நன்றாக சிந்தித்து ஆலோசனைகளை முன்வைத்திருக்கின்றீர்கள் நாகு.

//பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், சீட்டில் உட்கார்ந்து குளிர்சாதன அறையில் மட்டும் பணியாற்றாமல், பள்ளிகளுக்கு நேரடி சோதனைக்கு செல்லவேண்டும். இதில் எள்ளவும் கையூட்டு புகுந்து விடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். //

பெரும்பாலான கல்வித்துறை அதிகாரிகள் நேரடி சோதனைக்கு செல்வதே கையூட்டிற்காக என்பது வேதனைக்குரிய உண்மை.

siva gnanamji(#18100882083107547329) said...

அதிகாரப் புல்லுருவிகளின் பேராசை,
கல்வி வியாபாரிகளின் லாபவேட்டை,
எந்தத்தவறையும் நியாயப்படுத்திப் பேசும் நீசத்தனமான மனப்போக்கு-
"சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்.."

BadNewsIndia said...

தவலுக்கு நன்றி சபாபதி.
ஆவன செய்கிறேன்.